குடியுரிமை சட்டம் குறித்து ரஜினிக்கு ஒன்றும் தெரியாது!

சனி பெப்ரவரி 22, 2020

ரஜினிக்கு தன்னிடம் வட்டிக்கு வாங்கியவர்களை மட்டுமே தெரியும் எனவும் குடியுரிமை சட்டம் குறித்து அவருக்கு ஒன்றும் தெரியாது எனவும் சீமான் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மதுரை நெல்பேட்டை, மகபூப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல, ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எதிரானது.

மத்திய அரசு பொதுமக்களை பதட்டத்துடன் வைத்துக்கொள்கிறது. இதனை பயன்படுத்தி பொதுநிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறது. மதம் பார்த்து மனிதனை பிரிப்பது கொடுமையான வி‌ஷயம். பிரதமர் மோடி-டிரம்ப் ஒரே எண்ணம் கொண்ட ஒரு தாய் பிள்ளைகள். இந்தியா என்ற நாட்டை உருவாக்கியது ஆங்கிலேயர்கள்தான். அவர்கள் தான் இந்தியா என பெயர் வைத்தார்கள்.

சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு எந்த ஒரு பங்கும் கிடையாது. இந்தியா தனது அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்காளதேஷை பகை நாடுகளாக கருதக்கூடாது.

முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்றால் முதலில் குரல் கொடுப்பது நான்தான் என்று ரஜினிகாந்த் கூறினார். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் 8 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இங்கு ரஜினி வரவில்லை. ஏனென்றால் நீங்கள் அவரிடம் வட்டிக்கு வாங்கவில்லை.

வட்டிக்கு வாங்கியவர்களை மட்டும்தான் ரஜினிக்கு தெரியும். குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து அவருக்கு ஒன்றும் தெரியாது.  இவ்வாறு அவர் பேசினார்.

இன்றும் மதுரையில் இஸ்லாமியர்கள் குடியிரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.