கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் ஓய்வுபெற வேண்டும்

திங்கள் ஜூன் 24, 2019

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அரசியல் பணியில் இருந்து ஓய்வுபெறுவதே அவர் தமிழ் இனத்துக்குச் செய்யக்கூடிய மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு நாம் கூறுவது அவருக்கு எதிராகவோ அன்றி அவரை வஞ்சிப்பதற்காகவோ அல்ல.

மாறாக சமகாலத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையே  காரணம் என்ற அடிப்படையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கின்ற இரா. சம்பந்தர் தனது அரசியல் பணியில் இருந்து ஓய்வுபெறுவது அவருக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மையாக அமையும்.

நீண்டகால அரசியல் அனுபவம் இரா.சம்பந்தர் அவர்களுக்கு உண்டாயினும் அவரின் முதுமை காரணமாகவும் தனது அரசியல் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு ஒரு சிலரில் முழுமையாகத் தங்கியிருக்கின்ற தேவைப்பாடு இருப்பதன் காரணமாகவும் அவரால் தூர நோக்குடனும் இராஜதந்திர அடிப்படையிலும் இயங்க முடியாமல் உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.

சுருங்கக்கூறின் இரா.சம்பந்தரின் முதுமை காரணமாக ஏற்படக்கூடிய இயலாமையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர்,தங்கள் பாட்டில் தீர்மானங்களை எடுத்துக் கொண்டு சுயமாக இயங்குகின்றனர்.

அதிலும் நாங்கள் கூறினால் அதனைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வர் என்பது போலவும் இன்னமும் தங்கள் கட்சியே தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இயங்குவது போலவும் காட்டிக் கொள்வதில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாட்டில் ஒன்றுதான் கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கு மூன்று மாதகால அவகாசம் வழங்கிய கடிதமாகும்.

இவ்வாறான கடிதத்தின் உள்நோக்கம் என்ன என்பதைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள முடியாதவர்களல்ல.

தவிர, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராக இருக்கின்ற இரா.சம்பந்தர் அவர்கள் கிழக்கு மாகாணத்தைக் காப்பாற்றத் தவறிவிட்டார்.

அரசாங்கத்தின் சலுகைகளுக்காகவும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நட்புக்காகவும் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்து தமிழ் மக்களுக்கு அவர் அநீதி செய்து விட்டார் என்பதே உண்மை.

இந்த உண்மைகள் தமிழ் மக்களின் ஆழ் மனங்களில் ஆறாத ரணமாக உள்ளது.

நிலைமை இதுவாக இருக்கையில்,தொடர்ந்தும் இரா.சம்பந்தர் அவர்கள் அரசியல் தலைமையில் இருப்பது ஆரோக்கியமானதல்ல.

ஆகையால் முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து விட்டு ஒதுங்கிக் கொள்வது அவரின் நற்பெயருக்குக்களங்கம் ஏற்படாமல் இருப்பதற்கான உபாயமாகும்.

நன்றி வலம்புரி