கூட்டமைப்பினர் திருட்டுதனமாக பௌத்த விகாரை அமைக்க அனுமதி!

வெள்ளி மார்ச் 22, 2019

யாழ்ப்பாண நகர நுழைவாயிலில் நாவற்குழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை நிர்மாண வேலைகளிற்கு கூட்டமைப்பினர் திருட்டுதனமாக அனுமதி வழங்கியமை அம்பலமாகியுள்ளது.

சத்தமின்றி விகாரையின் நிர்மாணவேலைகள் தொடர்கின்ற நிலையிலேயே கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை கட்டுமானப்பணிகளிற்கு எதிராக நீதிமன்றில் தொடுத்திருந்த வழக்கினை விலக்கிக்கொண்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

குறித்த பௌத்த விகாரை நிர்மாண வேலைகளிற்கு எதிராக சாவகச்சேரி பிரதேசசபை முன்னதாக வடமாகாண முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைய சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவை பெற்றிருந்தது.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாவகச்சேரி நகரசபையின் ஆட்சியை கைப்பற்றியதும் இந்த விவகாரத்தைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள அரசாங்க ஊழியரான பிரதேசசபை செயலாளர் தள்ளப்பட்டிருந்தார்.

இதனிடையே விகாரையின் அபிவிருத்தியை விரைவுபடுத்துவதற்காக 22 பிப்ரவரி அன்று அமைச்சரான சம்பிக ரணவக்க, நேரில் நாவற்குழிக்கு வருகை தந்திருந்தார்.

இதனிடையே நாவற்குழி சிங்கள குடியேற்ற திட்டம் ராஜபக்ஷ நிர்வாகத்தின் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட குடியேற்றத் திட்டம் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கீழ் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு அரசு நிதியுதவி வீட்டுவசதி திட்டங்களுடன் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளமை தெரிந்ததே.