கூட்டமைப்பிற்கு ஒரு பகிரங்க மடல்

திங்கள் ஜூலை 18, 2022

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை தொடர்ந்து, நாடாளுமன்ற வாக்களிப்பின் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களை பிரதிநித்துவம் செய்பவர்கள் என்னும் வகையில், தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் அதே வேளை, உடனடி மற்றும் நீண்டகால அரசியல் நலன்களை கருத்தில் கொண்டும் செயலாற்ற வேண்டிய கடப்பாடு தங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

அடிப்படையில் இது தென்னிலங்கை சிங்கள தரப்புக்களிடையிலான அதிகாரப் போட்டியாகும். இதனை ஜனநாயகம் என்னும், ஒற்றைச் சொல் கொண்டு அளவிட முடியாது. இதனை ஜனநாயகம் என்னும் சொல் கொண்டு அளவிட முடியுமென்றால், ஒரு ஆசனத்தை கொண்டிருந்த, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட போது, அவருக்கு அமெரிக்கத் தூதுவர் வாழ்த்துத் தெரிவித்திருக்க மாட்டார். அமெரிக்க தூதுவர் ஜனநாயக நெறிமுறைகளை அறியாமலா பேசியிருக்கின்றார்? எனவே வழமையான சொற்களின் வழியாக, தற்போதைய ஜனாதிபதிக்கான போட்டியை மதிப்பிட முடியாது.

கடந்த காலம், தமிழர் தரப்புக்களுக்கு போதிய அனுபவங்களை தந்திருக்கின்றது. ரணில்-மைத்திரி அரசாங்கத்தில், ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்ட போது, கூட்டமைப்பு ரணில் சார்புநிலையையே எடுத்திருந்தது. ரணிலுக்கு ஆதரவாக உள்ளுக்குள்ளும் வெளியிலும் பிரச்சாரங்களில் ஈடுபட்டது.

அன்றைய சூழலிலும் கூட – இது தென்னிலங்கையின் அதிகார மோதல், எனவே இதற்குள் கூட்டமைப்பு தலையிடாமல் இருப்பதுதான் நல்லதென்னும் அப்பிராயங்கள், என்னை போன்றவர்களால் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் நீங்கள் எவற்றையும் பொருட்படுத்தவில்லை. அன்று நீங்கள் மேற்கொண்ட முடிவால், தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன?

இப்போதும் முன்னரைப் போன்றதொரு நிலைமைதான் உருவாகியிருக்கின்றது. அன்று நீங்கள் ஆதரித்த ரணில் ஒரு பக்கமாகவும், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, நீங்கள் ஆதரித்த சஜித் பிரேமதாச இன்னொரு புறமாகவும் கதிரையை கைப்பற்றும் போட்டியில் ஈடுபடவுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க பொருத்தமற்றவர் என்றோ அதே வேளை சஜித் பிரேமதாச பொருத்தமற்றவர் என்றோ, வாதிடக் கூடிய தகுதிநிலை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கில்லை. ஏனெனில் இருவரையுமே கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்திருக்கின்றது.

அதிலும் குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலத்தில், கூட்டமைப்பு, ரணில் விக்கிரமசிங்கவுடன் இனைந்தே செயற்பட்டிருந்தது. அவரது ஆதரவுடன், புதியதொரு அரசியல் யாப்பை கொண்டுவர முடியுமென்னும் நம்பிக்கை மக்களுக்கு ஊட்டப்பட்டது. அன்று சரியானவராகவும் ஆற்றல் மிக்கவராகவும் தெரிந்த ரணில், இப்போது எவ்வாறு தவறானவராகம் பொருத்தமற்றவராகவும் தெரிய முடியும்?

எனவே, மேற்படி இருவரில் யார் சிறந்தவர் என்னும் போட்டியில் கூட்டமைப்பு பங்குபற்ற முடியாது. பங்குபற்றவும் கூடாது. ஏனெனில் இருவருக்கிடையிலான போட்டியென்பது, தென்னிலங்கையின் பிரச்சினை. எவர் அதிகாரத்திற்கு வந்தாலும் அவருடன் பேசி, விடயங்களை வெற்றிகொள்வதற்கான தந்திரோபாயங்கள் தொடர்பில் சிந்திப்பதும், செயற்படுவதுதான் கூட்டமைப்பிற்கு முன்னாலுள்ள ஒரேயொரு அரசியல் தெரிவாகும்.

இந்த அடிப்படையில் சிந்தித்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பின் போது, நடுநிலைமை வகிப்பதே சிறந்தது அதாவது வாக்கெடுப்பை தவிர்ப்பதே ஒரேயொரு சிறந்த தெரிவாக இருக்க முடியும்.

மேலும். நிலைமைகளை அவதானிக்கும் போது, சஜித் பிரேமதாச வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே இருப்பதாக தெரிகின்றது. ரணிலின் வெற்றிவாய்ப்பு தொடர்பிலும் இப்போது எதனையும் கூற முடியாது ஆனால், ஒரு வேளை அவர் வெற்றிபெற்றால் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டிய தேவையும் இருக்கின்றது. இந்த அடிப்படையில் சிந்திக்கும் போதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பில் பங்குகொள்ளாமல் விடுவதே, தமிழ் மக்களின் நலனுக்கு சிறந்தது.

எனவே கடந்த கால அனுபவங்களலிருந்து கற்றுக்கொண்டு, மக்களின் நலனை மட்;டுமே முன்னிறுத்தி, அரசியல் தீர்மானங்களை எடுக்குமாறு, மக்கள் சார்பில் உங்களிடம் கோருகின்றேன். ஒரு கூற்றுண்டு – வரலாற்றின் தவறுகளை மறப்போர், அந்த தவறுகளை மீளவும் செய்ய சபிக்கப்பட்டவர்களாவர்.

மக்களை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் வரலாற்று மறதியானது, இறுதியில் மக்களின் எதிர்காலத்தையே நாசப்படுத்துகின்றது .