கூட்டமைப்பிடம் இல்லாமல் போன குழவிக்கூட்டு மதிநுட்பம்!

செவ்வாய் சனவரி 28, 2020

தமிழ் மொழியில் மதிநுட்பம் என்ற சொல் மிகப் பெறுமதியானது.
மதி என்பதற்கு அறிவு என்றொரு பொருள் உண்டு.

ஆக, நுட்பமான அறிவு என்பது அறிவை விட மேலானது என்பதால், மதிநுட்பம் என்ற சொற்பதத்தை நம்மவர்கள் மிகப்பெறுமதியான சொல்லாகப் பயன்படுத்தினர்.

மனிதர்களிடம் அறிவு என்பதை விட மதி நுட்பம் இருக்க வேண்டும் என்பதாலேயே அது சார்ந்த கதைகளை நம் முன்னோர்கள் ஆக்கித் தந்தனர்.

பாட்டி வடை சுட்ட கதை, கிணற்றுக்குள் சிங்கத்தின் நிழலைக் காட்டிய முயல் கதை, மரத்தில் பழுத்த பழங்கள் சிதறிக் கிடப்பதைக் கண்ட புத்திமான் எடுத்த முடிவு போன்ற கதைகள் எல்லாம் மதிநுட்பத்தின் ஆற்றலை விருத்தி செய்வதற்கானதாகும்.

மதிநுட்பம் என்பது மனிதர்களுக்கு மட்டும் உரியதென்று யாரும் எண்ணி விடக்கூடாது.

மாறாக, மனிதர்கள் வியக்குமளவுக்கு ஏனைய ஜீவராசிகளிடம் மதிநுட்பம் மிகுந் திருப்பதை நாம் காண முடியும்.

உதாரணமாக கருங்குழவிக்கூட்டில் ஏகப்பட்ட நுழைவாயில்கள் இருப்பதை நம் கண்ணால் பார்க்க முடியும். ஆனால் குழவிக் கூட்டுக்கு ஆபத்து நேருமாயின் அதில் இருந்து இராணிக்குழவியைக் காப்பாற்றிச் செல்வதற்காக அந்தக் கூட்டில் இரகசியப் பாதை ஒன்று இருக்கும்.

இதனை நாம் கண்டறிவது முடியாத காரியம்.

அந்தளவுக்கு மதிநுட்பத்துடன் அந்த இரகசியப் பாதை குழவிக்கூட்டில் அமைக்கப்பட்டிருக்கும். இது குழவிகளின் மதிநுட்பம்.

இங்கு குழவிகளிடம் இருக்கின்ற மதிநுட்பம் நம் தமிழ் அரசியல் தரப்புகளிடம் இல்லாமல் போனமைதான் வேதனைக்குரியது.

பொதுவில் மதிநுட்பம் கொண்ட அரசியல் தலைமையால் மட்டுமே தன் இனம் சார்ந்த மக்களைப் பாதுகாக்கவும் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

எனினும் எங்கள் தமிழினத்தைப் பொறுத்த வரை மதிநுட்பம் என்பது மருந்துக்கும் இல்லை என்றாகிவிட்டது.

இதை நாம் கூறும்போது சிலர் நம் மீது வெறுப்படையலாம்.ஆனால் உள்ளதைச் சொல்வதன் மூலமே எங்களை நாம் சீராக்கம் செய்ய முடியும் என்ற அடிப்படையில் இதனைக் கூறித்தானாக வேண்டும்.

ஆம், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேம தாஸவை கூட்டமைப்பு ஆதரிக்கும்போது, சிலவேளை கோட்டாபய ராஜபக்­ வெற்றி பெற்றால் அதனை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய மதிநுட்பம் கூட்டமைப்பிடம் இருக்கவில்லை.

ஆனால் கூட்டமைப்பு ஆதரித்து நின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குழவிக்கூட்டு மதிநுட்பத்தை மிகச் சிறப்பாக வகுத்திருந்தார்.

சஜித் பிரேமதாஸ தோற்றால், கோட்டாபய ராஜபக்­வை எவ்வாறு கையாள்வதென்பதற்கான ஏற்பாடுகளை ரணில் செய்திருந்தார்.

அதன் காரணமாக புதிய அரசாங்கமும் அவருக்குப் பலத்த பந்தோபஸ்து வழங்கியுள்ளது.

ஆனால் கூட்டமைப்பு வானம் பார்த்தது. இப்போது ஜனாதிபதியைச் சந்திக்கக்கூட முடியாமல் தவமிருக்கிறது.
என்ன செய்வது குழவிக்கூட்டு மதிநுட்பம் தெரியாவிட்டால் இதுதான் நிலைமை.
நன்றி வலம்புரி