கவலை தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்;சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு!

புதன் ஓகஸ்ட் 21, 2019

புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் கவலை தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து தூதரகங்கள், ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் நோர்வே, சுவிட்சர்லாந்து தூதரகங்கள் ஆகியவற்றின் இணக்கத்தின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
   
குறித்த அறிக்கையில், மனித உரிமை மீறல் தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியிருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை இலங்கையின் இராணுவத் தளபதியாக நியமித்துள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் நிலைப்பாட்டை நாங்களும் பகிர்ந்துகொள்கின்றோம்.

சவேந்திர சில்வாவிற்கு இராணுவத் தளபதியாகப் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளமையின் மூலம் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் 2019 மார்ச் மாதத்தில் இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியிருந்த வாக்குறுதி தொடர்பில் தற்போது சிக்கல்நிலை தோன்றியுள்ளது.

அத்துடன் தேசிய ஒருமைப்பாடு குறித்து இலங்கை காண்பிக்கும் முயற்சிகளைக் குறைத்துக் காண்பிப்பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்து வாழும் பொதுமக்களுக்கும் கவலையளிக்கும் தகவலை வழங்குவதாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.