கவுதம் மேனனின் இணைய தொடருக்கு;ஜெயலலிதா உறவினர் எதிர்ப்பு!

வியாழன் செப்டம்பர் 12, 2019

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் பணிகளில் இயக்குனர்கள் விஜய், பிரியதர்ஷினி இருவரும் ஈடுபட்டுள்ளனர்.

பிரியதர்ஷினி ‘த அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் படத்தை இயக்குவதாக பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இதில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். படத்துக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

‘தலைவி’ என்ற பெயரில் விஜய் இயக்கும் படத்தில், ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ’குயின்’ என்ற இணைய தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

இதுவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் என்று தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் ‘குயின்’ வெப் சீரிசின் கதை நாம் அறிந்த ஒரு பிரபல அரசியல்வாதியின் ஆளுமை மற்றும் அவருடைய குணாதிசயங்கள் மற்றும் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது” என்று ‘குயின்’ வெப் சீரிஸ் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா வின் அண்ணன் மகனான தீபக் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- ஒரு அரசியல் தலைவரை மையமாக வைத்து ‘குயின்’ என்ற வெப் சீரிசை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருவதாகவும், அதில் ரம்யா கிருஷ்ணன் நாயகியாக நடிப்பதாகவும் பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன். என் அத்தை ஜெயலலி தாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் தான் எடுத்து வரும் படத்தின் கதையை என்னிடம் கூறிய இயக்குநர் விஜய் படத்தைத் தொடங்குவதற்கு தடையில்லாச் சான்றிதழும் பெற்றுச் சென்றார்.

இந்த சூழலில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு அரசியல் தலைவரைப் பற்றிய தன்னுடைய புதிய வெப் சீரிஸ் பற்றி அறிவித் துள்ளார். அந்த அரசியல் தலைவர் யார் என்பது குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

நான் ஊடகங்களிடம் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் குடும்பத்தின் அனுமதியின்றி ஏதேனும் ஒரு படமோ அல்லது ஒரு வெப் சீரிஸோ என்னுடைய அத்தை ஜெயலலிதாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டால் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு கையாள்வோம்.

யார் ‘குயின்’ என்பதை கவுதம் மேனன் தெளிவுபடுத்துவார் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.