லெப்.கேணல் நாயகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

ஞாயிறு செப்டம்பர் 29, 2019

யாழ்ப்பாணம் புலோப்பளை பகுதியில் யாழ்.தேவி படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது 29.09.1993 அன்று வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் நாயகன் உட்பட்ட 80 போராளிகளினதும் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தென்மராட்சிப் பகுதிகளை வல்வளைக்கும் நோக்குடன் ஆனையிறவிலிருந்து சிறிலங்கா படைகளால் “யாழ்தேவி” என்ற குறியீட்டுப் பெயருடன் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலோப்பளைப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் இப்படை நடவடிக்கையை வழிநடாத்திய சரத் பொன்சேகா உட்பட இரு நூறு படையினர் படுகாயமடைந்தனர்.

படையினரின் இரு முதன்மைப் போர் டாங்கிகள் தாக்கியழிக்கப்பட்டன.பெருமளவான ஆயுதங்கள், வெடிபொருட்கள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.

இந்த முறியடிப்புத் தாக்குதலில் கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் நாயகன் உட்பட்ட 80 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.