மைத்திரியின் மரணதண்டனை ஆவலும் தமிழ்த் தேசிய இனத்திற்கான ஆபத்தும்!! 

வியாழன் ஜூலை 18, 2019

சிறீலங்காவில் தற்போது பேசுபொருளாக இருக்கின்ற விடயம் மரண தண்டனை. உலகில் வழக்கொழிந்து வருகின்ற மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றார்.இந்த தீவிர முயற்சிக்கு பின்னால் உள்ள ஆபத்துக்களை தமிழ் மக்கள் உணராமல் இருப்பது வேதனையானது.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவேன் எனப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கின்ற மைத்திரிபால சிறிசேன,கூடவே இன்னுமொரு புதிய கருத்தையும் கூறிவருகின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பலத்திற்கு பின்னால் போதைப்பொருள் கடத்தல் இருந்தது என பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளார்.இந்தக் கருத்தின் பின்னால் உள்ள சிங்களத் தரப்பின் திட்டத்தை நாம் ஊகிக்காமல் இருக்க முடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் மெளனித்த பின்னர் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்,யுவதிகளை சிங்களப் படைகள் கைது செய்திருந்தனர்.அவர்களில் பலர் அப்பாவிகள்.புலிளோடு இணைந்து பணியாற்றாத பொது மக்கள். இவர்களையும் சிறீலங்கா அரசு புலிகள் என்றே அறிக்கையிட்டது.எல்லாவற்றையும் சேர்த்தே, போரில் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 11,000 புலி உறுப்பினர்களுக்கு தாங்கள் புனர்வாழ்வளித்து விடுதலை செய்துள்ளனர் என சிறீலங்கா அரசு கூறி வருகின்றது.

தற்போது கொண்டுவரப்படத் தயாராக இருக்கும் மரண தண்டனை சரத்தும், அதன் பின்னர் எழுந்துள்ள புலிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்ற கருத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.
தமிழர் தாயகத்தில் எந்த மூலையில் சிறீலங்கா படையினருக்கோ, காவல்துறையினருக்கோ ஏதேனும் அனர்த்தங்கள் நடைபெற்றால் புலிகளின் முன்னாள் போராளிகளின் தலையிலேயே பழி சுமத்தப்படுகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வவுணதீவில் இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டபோது கிளிநொச்சியைச் சேர்ந்த இரு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டமையும்,அதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக தாக்குதல் முயற்சி எனக் கூறி இரு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டமையும் நல்ல உதாரணங்கள்.

தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அடக்கியாள நினைக்கும் சிங்கள தேசத்திற்கு இந்த மரண தண்டனை புதிய உத்தி. தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுக்கும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் தமிழின விடுதலை ஆதரவாளர்களை அடக்குவதற்கு இந்தத் தண்டனை தங்களுக்கு உதவும் என சிங்கள தேசம் கருதுகின்றது.

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களின் உடமைகளில் போதைப்பொருட்களை வைத்துவிட்டு அவர்களைக் கைது செய்து சிறைகளில் அடைப்பதற்கும் அவர்களைத் தூக்கில் ஏற்றுவதற்கும் இந்த சட்டம் உதவும். அதன் மூலம் தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்க எவரும் துணிய முடியாத நிலை ஏற்படுத்தப்படும்.

மேலும், சிறைகளிலும் இரகசியத் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கும் இந்த மரண தண்டனை ஆபத்தாக அமையும். மறு பேச்சுக்கு இடமின்றி அவர்களையும் தூக்கில் ஏற்ற முடியும். அண்மையில், சிறீலங்கா ஜனாதிபதி வெளியிட்ட, முதல் கட்டமாக மரண தண்டனை நிறைவேற்றப்படுவோர் பட்டியலில் இரு சிங்களவர்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டிருந்தனர். மற்றிருவர் முஸ்லிம்கள். ஏனையோர் அனைவரும் தமிழர்கள்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் சிறைகளில் உள்ளனர். பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இன்றுவரை தென்னிலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களில் பிரபல அரசியல்வாதிகளும் உள்ளடக்கம். இவர்களாலேயே நாட்டுக்குள் அதிகளவான புதிய போதைப்பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவர்களைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. அப்படி இருக்க அப்பாவித் தமிழர்களைக் கைது செய்து சிறைகளில் அடைத்துவிட்டு அவர்களைத் தூக்கில் ஏற்றத் துடிக்கிறது சிங்கள தேசம்.

மரண தண்டனையை நடைமுறைப்படுத்த உத்வேகம் கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு  உண்மையான பற்று இருக்குமாயின் புதிய மதுபானசாலைகளை அமைப்பதற்கு தற்போதுவரை அனுமதிகளை வழங்கிக்கொண்டிருப்பது ஏன்?

அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் நூற்றுக்கணக்கான மதுபானசாலைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிக்கு தமிழ் மக்களின் அக்கறை இருக்குமாயின் பாடசாலைகள், ஆலயங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அண்மையில் உள்ள மதுபானசாலைகளை அகற்றுவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சுற்றாடலில் மட்டும் 14 மதுபானசாலைகள் இயங்குகின்றன. யாழ்ப்பாணச் சமூகத்தை போதைக்கு அடிமையாக்கி, இளைஞர்களின் விடுதலை உணர்வை மழுங்கடித்து, சுதந்திர வேட்கையை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் சிறீலங்கா அரசுகளின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே கடந்த காலங்களில் இவற்றுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்ற செயற்பாட்டிலேயே சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணிக்கின்றார். அவரது செயற்பாடுகள் கடந்தகால சிங்கள ஜனாதிபதிகளின் செயற்பாடுகளுக்கு புறம்பானது அல்ல. முன்னையவர்கள் கடைப்பிடித்த அதே தமிழின அழிப்புக் கொள்கையையே இவரும் பின்பற்றுகின்றார்.

மரண தண்டனையை நடைமுறைப்படுத்தியே தீருவேன் என்ற இவரது விடாப்பிடியான முயற்சிகளுக்கு பின்னால் பல்வேறு சக்திகளின் தூண்டுதல்கள் இருக்கின்றன. சிறீலங்காவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்புக்கள் எழுந்தாலும் சிங்களக் கடும்போக்குவாதிகள் அனைவரும் மைத்திரியின் இந்தச் செயற்பாட்டுக்கு பூரண ஆதரவளித்திருக்கின்றனர்.

இந்த ஆதரவுத் தளம் மேலும் அதிகரித்துச் செல்கின்றது.எனினும், தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை உள்ளவர்கள் போல நடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு எந்தவிதக் கருத்துக்களையும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்துள்ள நிலையில், தற்போது கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மரண தண்டனைக்கு எதிராக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கின்றார்.

மைத்திரியின் இந்தச் செயற்பாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் முடிவை மீள் பரிசீலணை செய்யுமாறு அந்த நாடுகள் மைத்திரிக்கு அழுத்தம் கொடுத்திருக்கின்றன. எனினும், எவரின் அழுத்தத்திற்கும் தான் அடிபணியப்போவதில்லை என அவர் இறுக்கமாகத் தெரிவித்திருக்கின்றார்.

ஈழத்தீவில் சுயாட்சி கோரிப் போராடிய தமிழினம் இன்று கையறு நிலையில் இருக்கும்போது மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவதானது தமிழர்களின் விடுதலைக் கோரிக்கைக்கும் சுயாட்சிக் கோரிக்கைக்கும் பெரும் தடைக்கலாக அமையும். தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் செயற்பாட்டாளர்களில் ஓரிருவரைக் கைது செய்து தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தார்கள் என்ற பேரில் தூக்கு மேடைக்கு அனுப்பினால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

தமிழ் மக்களுக்காக எவரும் குரல்கொடுக்க முன்வராத நிலமையை ஏற்படுத்தும்.

தமிழர் தாயகத்தில், தமிழர்களின் பூர்வீக நிலங்கள் சிங்களவர்களாலும் முஸ்லிம்களாலும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. பெளத்த பிக்குகள் இந்த விடயத்தில் மிகத் தீவிரமாக இருக்கின்றனர். அதற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து பின்னர் தூக்கில் போடுவதற்கான சரத்துக்கள் கூட மரண தண்டனைச் சரத்தில் இணைக்கப்படலாம். ஆளும் வர்க்கத்தின் மதம் என்ற ரீதியில் பெளத்தத்திற்கு எதிராக எவரும் குரல்கொடுக்க முடியாத நிலைகூட ஏற்படுத்தப்படலாம்.

இவ்வாறான கபட நோக்கத்துடன்தான் மரண தண்டனையை சடைமுறைப்படுத்த சிங்கள தேசம் துடித்துக்கொண்டிருக்கின்றது. தமிழர்கள் தற்போது கையறு நிலையில் இருந்தாலும் இதற்கு எதிராகக் குரல்கொடுக்க முடியாதவர்கள் அல்லர். போராட்டங்கள் முனைப்புப்பெற வேண்டும். மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவதை சிங்கள தேசம் கைவிடும்வரை பன்னாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க
வேண்டும்.

ஆசிரிய தலையங்கம்
நன்றி: ஈழமுரசு