மாமனிதன் பவுஸ்ரின்: தேசப்பணியாளர்களின் நெஞ்சில் ஆழப் பதிந்த பெயர்

சனி மார்ச் 23, 2019

பவுஸ்ரின்
அவன் உறவுகளுக்கும்,
நண்பர்களுக்கும்
நன்கு தெரிந்த பெயர்.
பவுஸ்ரின்
ஈழக் கனவைச் சுமந்து
பிரான்சில்
விடுதலைப் புலிகளின்
வழி நடந்த
தேசப்பணியாளர்களின் நெஞ்சில்
ஆழப் பதிந்த பெயர்.

 

அரை நூற்றாண்டு
வாழ்க்கையில் - தன்
அரை நூற்றாண்டு
வாழ்க்கையில்
கால் நூற்றாண்டிற்கும் அதிகமாய்
விடுதலைக்காய்
கால் கடுக்க நடந்தவன் - இன்று
ஓய்வெடுத்து உறங்குகின்றான்.
போராளிக்குச் சாவுதான்
நிரந்தர ஓய்வாம் - இது
தேசியத் தலைவர் சொன்னது.
இப்போதுதானே உன் கால்களும்
நிரந்தரமாக ஓய்வெடுத்துக் கிடக்கின்றன.

 

368 நாட்கள்
18 ஆயிரம் கிலோ மீற்றர்கள்
சீனப் பெரும் தலைவர்
மாவோ நடந்தது
விடுதலைக்கான
நீண்ட பயணம் என
வரலாறு சொல்கின்றது.
30 ஆண்டுகள்
விடுதலைக்காக நடந்த - உன்
பயணத்தை - நாம்
என்னென்று சொல்வோம்?
ஐ.நா. மனித உரிமை மையத்தின்
ஐரோப்பிய ஒன்றியத்தின்
ஐரோப்பிய நாடளுமன்றத்தின்
கதவுகளைத் தட்டித் திறக்க - நீ
சென்றுவந்த தடவைகள் எத்தனை?
அத்தனையும் எண்ணினால்
எத்தனை பல ஆயிரம்
கிலோ மீற்றர்கள் வருமோ?
விடுதலைக்காய் உழைப்பதற்கு
கணக்குப் பார்த்தவனல்ல - நீ
விடுதலையின் நாளுக்காய்
தமிழினத்தின்
விடுதலையின் நாளுக்காய்
கனவு கண்டவன் நீ.

 

களத்துப் போராளிகளைப் போல்
புலத்துப் போராளிகளையும்
நேசித்தவர் தலைவர் - பார்த்துப்
பெருமைப்பட்டவர் தலைவர்
தமிழர் தேசத்தின் விடிவிற்காய்
ஓய்வின்றிப் போராடிய போராளியே
விடுதலைக்கான பணிகளும்
விடுதலைக்கான பாதையும்
இன்னும் நீண்டு கிடைக்கையில்
கண்மூடிக் கிடப்பதேனோ..?

 

புன்னகை எப்போதும்
உனக்குச் சொந்தமானது
கோபத்திலும் புன்னகைக்கும்
இன்னொரு தமிழ்ச்செல்வன் நீ.
என்னடாப்பா... என்னவாம்...?
தெரிந்துகொள்ளும் ஆர்வம்
உன் கண்களில் பளிச்சிடும்.
தெரிந்துகொண்டே கேட்கிறான் பார்
நண்பர்களின் நகைப்பு
உன் ஆர்வத்தைத் தடுப்பதில்லை
வெற்றிச் செய்தியை
திரும்பப் திரும்பக் கேட்டு
ஆனத்தப்பட்டுக் கொள்வதில்
உன்னைப்போல் யாருளர் இங்கு?

 

ஓயாத அலைகள் வெற்றியை
அள்ளி அள்ளிப் பருகியவன் நீ
ஆனையிறவின் வெற்றியை
அணு அணுவாக ருசித்தவன் நீ
ஆனால் முள்ளிவாய்க்கால்..!
இனத்தின் பேரழிவில்
போராட்டத்தின் பின்னடைவில்
எல்லோரைப் போலவும்
கதிகலங்கிப் போய் நின்றவனும் நீ
தோற்றுவிட்டோம் என
துவண்டுபோனவர்கள் சிலர்
தோற்றுவிட்டோம் என
ஒதுங்கிக்கொண்டனர் சிலர்
தோற்றாலும் வெல்வோம்
நம்பிக்கையோடு நிமிர்ந்தவர்களில்
எங்கள் நண்பன் பவுஸ்ரின்
நீயுமல்லவா ஒருவன்.

 

ஆரம்ப முதல் இன்று வரை
ஈழமுரசும் பவுஸ்ரினும்
நிரந்தர நண்பர்கள்
அதன் நிரந்தர வாசகன்
அல்ல அல்ல
நிரந்தர விமர்சகன்
அதன் வளர்ச்சிப் படிகளில்
பவுஸ்ரினும் ஒருவன்
லாச்சப்பல் வரும்போதெல்லாம்
ஈழமுரசின் வாசலை
மிதிக்காமல் சென்றதில்லை
எத்தனை அவசரம் என்றாலும்
தனக்கு எத்தனை அவசரம் என்றாலும்
அனைவருக்கும் தன் கையால்
தேனீர் போட்டுக் கொடுத்து
அன்பைப் பகிர்ந்துவிட்டே
மறுவேலை பார்ப்பான்.
இந்த இறுக்கமான நட்புத்தான்
கலந்துகொண்ட இறுதி நிகழ்வும்
ஈழமுரசு என்றானதோ..?
கடந்த மார்ச் 9
நினைவுகளுடன் பேசுதல்
நூல் அறிமுக நிகழ்வில்
கலந்துகொள்ள வந்திருந்தான்
நிகழ்வு முடிந்தபின்னரும்
கதிரையில் இருந்து எழாமல்
ஆபிரிக்க நண்பன் ஒருவருக்கு
அந்த நிகழ்வினை
புரியவைத்துக்கொண்டிருந்தான்.
ஒரு வாரம் கடக்கவில்லை
வாரம் ஒன்று கடக்கவில்லை
வேலைத் தளத்தில் இருந்து
விம்மியழுதபடி நண்பன்
சொன்ன செய்தி பேரிடியாக
நெஞ்சில் இறங்கியது...
இன்னும் பல ஆண்டு
தேசப்பணியாற்றும்
பலம்மிக்க சக்தியொன்று
இத்தனை சடுதியாக
எமைவிட்டுப் போனது
எத்தனை பேரதிர்ச்சி..!

 

பிரான்ஸ் புரட்சிகர மண்
ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக
போரிட்டவர்களின் கல்லறைகள்
அதிகம் நிறைந்த மண்
விடுதலைக்கான விதைகள்
அதிகம் விதைக்கப்பட்ட
வீரியம் மிக்க மண் இது.
எங்கள் தேச விடுதலையின்
விதைகளும் தாய் மண்ணிற்கு வெளியே
இங்கேதான் அதிகம் விதைக்கப்பட்டுள்ளன.
தமிழீழ மாவீரர்களும்இ நாட்டுப்பற்றாளர்களும்
நிறைந்த மண்ணில்
இன்னொரு நாட்டுப்பற்றாளனாக இப்போது
உன்னையும் விதைக்கின்றோம்.
விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள் உறங்குவதில்லை
இது உலகின் பொதுமொழி
ஆனால் - இதுதான் எங்கள்
எதிர்கால நம்பிக்கையின் புதுமொழி.

கி.ஜெய்சந்தர்