மாமனிதர்களின் படுகொலைகள் ஆட்சியாளர்களின் பங்களிப்பும் ஒட்டுக்குழுக்களின் பின்னணியும்!

புதன் மார்ச் 06, 2019

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறீலங்கா இனப்படுகொலை இராணுவத்தின் ஒட்டுக்குழுக்களில் ஒன்றான பிள்ளையான் என அழைக்கப்படும் சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்னும் இழுபட்டுச் செல்கின்றது.

2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலை தொடர்பாக கடந்த 11.10.2015 அன்று கைது செய்யப்பட்ட பிள்ளையான் இன்னும் விசாரணைக் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

111

இவருடன் இந்தப் படுகொலை தொடர்பாக  பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் சிறீலங்கா இராணுவப்புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஆறு பேர் மீதும் 11 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த மாதம் இடம்பெற்ற விசாரணைகளின்போது, மாமனிதர் ஜோசப் பரராஜ
சிங்கத்தை பிள்ளையான் உள்ளிட்ட தாங்கள் ஆறு பேரும் இணைந்தே படுகொலை செய்தோம் என முதலாவது மற்றும் இரண்டாவது எதிரிகள் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

வழக்கின் எதிரிகளில் ஒருவரான பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) ஜோசெப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடையவர் என்று எதிரிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கொலைக்கான தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் பெருமளவு மக்கள் குழுமியிருந்த போதிலும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிள்ளையான் உள்ளிட்ட 6 எதிரிகளுக்கும் எதிரான வழக்கை மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுக்க சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுமதியளித்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸர்தீன், வழக்கை எதிர்வரும் (பெப்ரவரி) 21, 22ம் திகதிகளுக்கு ஒத்திவைத்துள்ளார்.

இந்த வழக்கில் பிள்ளையான் குழுவினர் எதற்காக சிறீலங்காப் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து இந்தப் படுகொலையைப் புரிந்தனர்.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்யவேண்டிய தேவை, பிள்ளையான் குழுவிற்கும் அப்பால் யாருக்கு தேவைப்பட்டிருந்தது என்பது தொடர்பான விடயங்கள் குறித்து இதுவரை விசாரணைகள் இடம்பெறவில்லை.

இந்நிலையில் தற்போது யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்
பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் படுகொலை குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தப் படுகொலைக்கு சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, கருணா தரப்பினருக்கு 5 கோடி ரூபாயை வழங்கியதாக புலனாய்வுத் தகவல் பிரிவின் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் லியனாராச்சிகே அபயரத்ன, கொழும்பு மேல் நீதவான் திலின கமகே முன்னிலையில் வழங்கிய சாட்சியின் போது தெரிவித்துள்ளார்.

111

2006 நவம்பர் 10ம் திகதி காலை ஏழு மணிக்கு ரவிராஜ் தெரன தொலைக்காட்சியில் நடந்த ஒரு நேரடி நேர்காணல் ஒன்றில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பி பின்னர் மீண்டும் வீட்டை விட்டு தனது வாகனத்தில் வெளியேறிய போது காலை 8:45 மணியளவில் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் உந்துருளி ஒன்றில் வந்த இரண்டு இனந்தெரியாதோரால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரவிராஜின் மெய்ப்பாதுகாவலரும் காவல்துறையினருமான லக்சுமன் லொக்குவெல்ல என்பவரும் இதன்போது கொல்லப்பட்டார்.

ஒரு ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் சில ரவைகளும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன. அதியுயர் பாதுகாப்புக்கொண்ட சிறீலங்கா படைத்துறையின் காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்னாலே இந்தத் தாக்குதல் இடம்பெற்றது.

கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் இந்த விசாரணையில் தற்போது  
இந்த கொலையானது கடந்த அரசாங்கத்தின் சூழ்ச்சியால் நடைபெற்றது எனவும். அதற்கான பணத்தை பாதுகாப்பு அமைச்சின் வசந்த என்பவர் ஊடாக கருணா தரப்புக்கு வழங்கப்பட்டது என்றும் புலனாய்வு தகவல் பிரிவின் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் லியனாராச்சிகே அபயரத்ன கடந்த வாரம் இடம்பெற்ற விசாரணைகளின்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த கொலையானது பிரதிக் காவல் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க, அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் டூல் மற்றும் கருணா தரப்பு தெரிந்தே மேற்கொண்டது எனவும் அபயரத்ன கூறியுள்ளார்.

கொலை நடந்த பின்னர், கருணா தரப்புக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் கொலையுடன் சம்பந்தப்பட்ட கருணா தரப்பைச் சேர்ந்தவர்கள் தன்னிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரவிராஜ் கொலை சம்பந்தமான பதிவு செய்யப்படாத வழக்கு விசாரணை மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் நடைபெற்றதுடன் சிரேஷ்ட அரச சட்டத்தரணி டிலான் ரத்நாயக்கவின் நெறிப்படுத்தலில் அபயரத்ன சாட்சியமளித்துள்ளார்.

வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கடந்த 2ம் திகதியும் ரவிராஜ் கொலை செய்யப்படுவதை நேரில் பார்த்த சாட்சியாளரான யஹன்ஜலோ ரோய் என்பவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவை குறித்த விபரங்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை.

இதுஇவ்வாறிருக்க, சிறீலங்காவின் பிரபல ரக்பி வீரர் வாசிம் தாஜீடீன் கொலை செய்யப்பட்ட தினத்தன்று அலரிமாளிகையிலிருந்து புறப்பட்ட நான்கு வாகனங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என  சிறீலங்கா சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சிறீலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சார்பில் கடந்த 28ம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

நாரஹன்பிட்டி காவல் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித்பெரேரா, முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்மா அதிபர் அநுர சேனநாயக்க, முன்னாள் கொழும்பு சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர ஆகியோரிற்கு எதிராகவே குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாஜீடீன் படுகொலை தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ள பிரதிசொலிசிட்டர் ஜெனரல் கொலை இடம்பெற்ற தினத்தன்று அலரிமாளிகையிலிருந்து புறப்பட்ட நான்கு வாகனங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

111

சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய இராணுவ கடற்படை அதிகாரிகள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர்கள் குறித்த உத்தியோகபூர்வ ஆவணங்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார். தாஜீடீன் பயன்படுத்தி மடிக்கணினி, செல்பேசி ஆகியவற்றை ஆராய்ந்த போதிலும் விசாரணைக்கு உதவியான விடயங்கள் எவையும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நன்றி: ஈழமுரசு