மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல்!!

சனி மே 21, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, உயர் தேசிய டிப்ளோமா (எச்.என்.டி.) மாணவர்களால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

கொழும்பு–காலிமுகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர்.

இவர்கள் கோட்டையில் உள்ள உலக வர்த்தகக் கட்டடத்துக்கு அருகில் உள்ள வீதி ஊடாக காலிமுகத்திடல் பக்கம் செல்ல முயன்றபோது, அந்த வீதியில் அவர்களைத் தடுத்து நிறுத்திய பொலிஸார், மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

எனினும், மாணவர்கள் பொலிஸாரின் தாக்குதல்களை எதிர்கொண்டு சிலமணிநேரம் அங்கு நின்று ஜனாதிபதிக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்த முடியாதவாறு பொலிஸார் ஏற்கனவே நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.