"மாட்டு சாணத்தில் வர்ணம் பூச்சு"பாஜக அமைச்சர் அறிமுகப்படுத்துகிறார்!

திங்கள் சனவரி 11, 2021

கிராமங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் வர்ணம் பூச்சு, காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் சார்பில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாளை (ஜன.12) அறிமுகம் செய்கிறார். இதற்கு “காதி ப்ராக்ரிதிக் பெயிண்ட்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வர்ணம் பூச்சு தயாரிப்பில் மாட்டுச்சாணம் முக்கிய பொருளாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இது சுற்றுச் சூழலுக்கு நன்மையளிக்கும் என்றும், நச்சுத்தன்மையற்ற, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர்கள் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட தயாரிப்பு என அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வர்ணம் பூச்சில் ஈயம், பாதரசம், குரோமியம், ஆர்சனிக், காட்மியம் போன்ற கன உலோகங்கள் பயன்படுத்தப்படவில்லை.

இந்த திட்டத்தால் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் நிலையான உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் கால்நடை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.