மாதவனை எதிர்பார்த்து காத்திருக்கும் தாதா இயக்குனர்!

புதன் மார்ச் 20, 2019

தாதா 87 படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் விஜய் ஸ்ரீஜி, மாதவனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். 

கலை சினிமாஸ் தயாரிப்பில் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த படம் தாதா 87. இதில் சாருஹாசன், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். 

இப்படத்தில் திருநங்கைகளின் வாழ்க்கையையும், வலியையும் திரைக்கதையாக அமைத்திருந்தார் இயக்குனர். மேலும் திருநங்கைகளை பெண்கள் என்றே அழைக்கலாம் என்பதை பதிவு செய்திருந்தார். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக நாயகியாக நடித்த ஸ்ரீபல்லவி இதில் திருநங்கையாக நடித்திருந்தார். ஒரு பெண் திருநங்கையாக நடித்தது இதுவே முதல் முறை. இப்படம் தற்போது தெலுங்கில் ‘பவுடர்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் பீட்டரு படத்தை தற்போது இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இயக்கி வருகிறார். அதன்பின் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி, பிரைன் எனும் புதுவித சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை கலை சினிமாஸ் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் நடிப்பதற்காக மாதவனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் நடிக்க ஒப்பந்தம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.