மாவீரர்கள் - போராளிகளின் அர்ப்பணிப்பில் உருவான வானொலியின் தியாக வரலாற்றுக்கு உரிமை கோரும் வணிக நிறுவனம்!

வெள்ளி ஜூன் 14, 2019

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக ஊடகமாக இயங்கிய வானொலி அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ்.

தமிழ்த் தேசப்பற்று மிக்க மூத்த ஊடகவியலாளரும், நாடக ஆசானுமாகிய ஏ.சி.தாசீசியஸ் அவர்களால் 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ், 1998ஆம் ஆண்டின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பொறுப்பேற்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வானொலியாக அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மாறியதும், அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது அதிலிருந்து வெளியேறிய இரண்டகர்கள் சிலர், இந்திய ஒட்டுக்குழுவான ஈ.என்.டி.எல்.எப் கும்பலுடன் இணைந்து தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற போட்டி வானொலியைத் தொடங்கினார்கள்.

இதனையும் எதிர்கொண்டு, நாட்டுப்பற்றாளர்கள், மாவீரர்கள், போராளிகள், புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், தேசிய ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் வீறுநடைபோட்டது தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ்.

இதனால் செய்வதறியாது மண்கவ்விய இரண்டகர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் காலில் விழுந்து மன்றாடி பாவ மன்னிப்புப் பெற்று மீண்டும் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் வானொலியில் இணைந்தார்கள்.

2009 வைகாசி 18இற்குப் பின்னர் அரங்கேறிய துரோகங்கள் பலவற்றில் ஒன்றாக அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் வானொலியை நிர்வகிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட புலம்பெயர் போராளி அதனை நட்டாற்றில் கைவிட்டு தனது குடும்ப வாழ்வில் கவனம் செலுத்த, தனியார் கைகளில் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் சிக்கிச் சின்னாபின்னமாகியது.

 

IBC

 

இறுதியில் வணிக நிறுவனம் ஒன்றின் கைகளில் வீழ்ந்த இந்த வானொலி, சிங்கள ஊடகங்களை மிஞ்சும் வகையில் இடையிடையே சிங்களப் படைகளுக்குத் துதி பாடியும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சேறு பூசியும் வருகின்றது.

 

IBC1

 

இந்நிலையில் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் வானொலியின் தியாக வரலாற்றை தமது முதிசமாக அதன் இருபத்திரண்டாவது ஆண்டு நிறைவில் அதனைத் தமது பிடியில் வைத்திருக்கும் தனியார் வணிக நிறுவனம் உரிமை கோரியிருப்பது வேடிக்கையானது என தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதிலும் வேடிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக ஊடகமாக அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் மாறியதை அறிந்ததும் அதைவிட்டு விலகியோடி இந்திய ஒட்டுக்குழுவான ஈ.என்.டி.எல்.எப் கும்பலுடன் இணைந்து போட்டி வானொலியைத் தொடங்கிய இரண்டகர்கள் அதன் தியாக வரலாற்றில் தமக்கும் காத்திரமான பங்கு உண்டு என்பது போல் நடந்து கொள்வது தான் என்றும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.