மே 18-: தமிழின அழிப்பு நினைவு நாள்

சனி ஏப்ரல் 20, 2019

Toronto: 2009ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தின் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான எம்மக்கள் ஆண் பெண் குழந்தைகள் என பாகுபாடின்றி கொல்லப்பட்டு பத்தாண்டுகள் முடிவடைகின்றது. அக்காலகட்டத்தில் பலியான அப்பாவிப் பொதுமக்களுக்குமான நினைவாகவும், இன அழிப்பிற்கான நீதி வேண்டியும் உலகெங்கும் இருக்கும் தமிழ் மக்கள் தவமிருக்கும் ஒரு நாளாக மே 18 அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.

பத்தாண்டு கடக்கும் இவ்வருடத்தில் தமிழ் மக்கள் தமது போராட்டத்தை மேலும் வலுப்படுத்த பல ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இவ்வருடம் மே 1ம் நாளில் இருந்து மே 17ம் நாள் வரை பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. மே 18ம் திகதி இறுதி நிகழ்வு 'ரொரண்டோ - அல்பேர்ட் கம்பெல் சதுர்க்கத்தில்' மாலை 6 மணிக்கு வழமைபோல் ஒரு நிகழ்வாக இடம்பெறும். அமைப்புக்கள், சங்கங்கள், கழகங்கள் அனைத்தும் இவ்வருடத்தில் முன்னின்று ஈடுபட வேண்டும் என வேண்டிக் கொள்கின்றோம்.

நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும், இன அழிப்புக்கான நீதி கோரும் எம்மக்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வழிவகைகளை உள்ளடக்கியதாக அமையவேண்டும். கீழ்வரும் விடயங்கள் உள்ளடக்க நாம் வேண்டிக்கொள்கின்றோம்.

1. முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான கருத்து பகிரும் வகையிலும்;

2. எமது இளம் சமுதாயம் முழுவதும் பங்குபற்றி எமது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும்;

3. இன அழிப்பை வேற்றின சமுதாயத்திற்கு எடுத்து செல்லும் வகையிலும்;

4. பொறுப்புக் கூறும் விடயத்திலும், தமிழின அழிப்பு என்பதை பிரகடனப்படுத்தும் விடயத்திலும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் கனடிய அரசு ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கு தூண்டக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும்;

மற்றும் பல்வேறு வகையான முயற்சிகளை உள்ளடக்கியதாகவும் இன்னிகழ்ச்சிகள் அமைய வேண்டிக் கொள்கின்றொம்.

இன்று வரை இலங்கையில் எந்த அரசாங்கமும் நீதி மறுப்பில் வேறுபாடின்றி தொடர்ந்து தன்பாதையில் நீதி மறுத்து வருகிறது. சர்வதேச சமூகம், மனித உரிமை அமைப்புகள், ஜெனீவா அரங்கு என்பவற்றின் குரல்களும் மதிப்பிழந்து ஆமை வேகத்தில் நகர்கின்றன. இந்த வருடத்தில் நினைவு நிகழ்வுகள் எமது மக்களின் விடிவுக்கான அடித்தளமாக கொண்டு செல்லப்படல் வேண்டும்.

 புலம்பெயர் நாடுகளில் அகதிச் சமூகமாகவும், வந்தேறு குடிகளாகவும் வாழும் நாம், எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக இணைந்து உரத்துக் குரல் கொடுக்கவேண்டிய நேரத்துக்கு முள்ளிவாய்க்காலின் பத்தாவது ஆண்டு நினைவுக் காலத்தில் வந்துள்ளோம்.

தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ம் திகதி 'தமிழின அழிப்பு நினைவு நாள்' (TAMIL GENOCIDE REMEMBRANCE DAY) கனடியத் தமிழர் சமூகத்துடன் இணைந்து உணர்வு பூர்வமாக முன்னெடுத்து வருகின்றமை யாவரும் அறிந்ததே. இந்த வகையில், எதிர்வரும் 2019 மே 18ஐ தாயகம், புலம்பெயர் தேசம் மற்றும் கனடாவிலும் எமக்கு நடந்தது 'இனப்படுகொலை' என்ற ஒற்றை கருத்துடன் ஒன்றிணைந்த சமூகமாய் முன்னெடுப்பது காலத்தின் தேவையாக உள்ளது.

இது தொடர்பாக கருத்துக்களையும் பங்குபற்றுதலையும் எதிர்பாக்கின்றோம். எனவே இங்குள்ள பொது அமைப்புகள், ஊர் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், அக்கறையுள்ள நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள தனிநபர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு உறவுகளின் பேரால் உரிமையுடன் கேட்கின்றோம்.

நன்றி!
தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை (NCCT)
தொலைபேசி: 416.830.7703
மின்னஞ்சல்: info@ncctcanada.ca