"மே 22 ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு - தமிழ்நாட்டின் கருப்பு தினம்!"-வ.கௌதமன்

வியாழன் மே 21, 2020

எங்கள் தூத்துக்குடி மண்ணின் சுற்றுச்சூழல்,
உயிர்ச் சூழலை நஞ்சாக்கி
பதினைந்து தமிழர்களின்
உயிரைப் பறித்த ஸ்டெர்லைட் என்னும்
நஞ்சைக் கக்கும் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி,
கடந்த 2018 மே 22- இல்  நடைபெற்ற
மாபெரும் அறவழி  போராட்டத்தில் படுகொலையுண்ட வீரத்தியாகிகளின் உயிர்த் தியாகங்கள் நினைக்கப்படுவதும், போற்றப்படுவதும்  இயற்கையையும், உயிர்ச்சூழலையும் பேண வேண்டியதின் பெருங்கடமையாகும்.  வலி சுமந்த இந்நாளை நினைவு நாளாக கடைபிடிக்கவும் உயிர்க்கொடை தந்த போராளிகளுக்கு சமூக இடைவெளியோடு நினைவேந்தல் நடத்தவும் முறைப்படி அனுமதி கேட்ட அவர்களது உறவினர்களுக்கு அனுமதி மறுத்ததோடு மட்டுமல்லாமல், மேற்கொண்டு அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறையினருக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

 நீர், நிலம், காற்று அத்தனையும் கெட்டு நோய்கள் பல அண்டி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலபேர் செத்து எத்தனையோ தடவை முறையிட்டும் மத்திய மாநில அரசுகளால் உதாசீனப்படுத்தப்பட்ட நிலையில்தான் அங்கு வாழும் எங்கள் தமிழர்கள் நூறு நாள் போராட்டத்தினை  அறிவித்து, பிப்ரவரி ஐந்தில் தொடங்கி, நாற்பத்து நான்காவது நாளான மார்ச் இருபத்து நான்காம் தேதி லட்சக்கணக்கான மக்கள் தன்னிச்சையாக திரண்டு மாபெரும் அறப்போராட்டத்தை உயிர் வலியோடு கையிலெடுத்தார்கள்.  வழக்கம்போல்  அரசுகளிடம் எந்த அசைவுமில்லை. மீண்டும் பல  படிநிலை போராடங்கள். அதன் பின்பு ஏப்ரல்  இருபத்து மூன்றாம் நாள் மாசுக் கட்டுப்பாட்டு அலுவலகம் முற்றுகை. காதடைத்து கிடக்கும் அதிகாரவர்க்கங்கள் எதற்கும் வாய் திறக்காத நிலையில்தான் "நச்சு ஆலை மூடாமல் வீடு வாசல் செல்லமாட்டோம்" என்கிற முழக்கத்தோடு போராட்டத்தின் நூறாவது நாளான 2018 மே 22- இல்  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முற்றுகையும், மனுகொடுக்கும் போராட்டமும் நடத்தப்பட்டது.

கிட்டத்தட்ட ஒன்பது முதல் பனிரெண்டு கிலோமீட்டர் தூரம்  லட்சக்கணக்கான  மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அறவழியில் பயணிக்க, வந்த வழி நெடுகிலும் நூற்றுக்கணக்கான மத்திய மாநில அரசு அலுவலகங்கள், துறைமுக கட்டிடங்கள் இருந்தாலும், அவைகள் எவற்றையும் தாக்காத, சிதைக்காத எங்களின் ஆயுதமற்ற மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மட்டும் தாக்கினார்கள் என அபாண்டமாக பழி சுமத்தி எப்படி கொடூரமாக சுட்டு கொல்ல முடிந்தது இந்த குரூரமானவர்களால்?

எங்கள் வீட்டுப்பிள்ளை பதினேழு வயதேயான ஸ்னோலினை வாயில் துப்பாக்கி வைத்து சுட்டிருக்கிறார்கள் நரபலி வேட்டைக்காரர்கள். இளைஞனான கார்த்திக் முதல் முதியவரான அம்மா ஜான்சி வரையிலும்,  காயம்பட்டு பின்பு இறந்தவர்கள் உட்பட பதினைந்து உயிர்களை பதைக்க பதைக்க சுட்டு கொன்றார்களே ஈவு இரக்கமற்ற அரக்கர்கள். ஏற்கனவே ஸ்டெர்லைட்டின் கோரத்தாண்டவத்தைப்பற்றி ஐநா சபையில் நான் பேசியிருந்தாலும், சுட்டுக்கொன்ற இக்கொடூர நிகழ்வு நடந்த ஒருமணி நேரத்தில் மாணவர்கள் இளைஞர்களோடு சென்னை சேப்பாக்கத்தில் ஊடகத்தினரை சந்தித்து கடும் கண்டனத்தை தெரிவித்துவிட்டு, ஸ்டெர்லைட் முதலாளியின் கொடும்பாவியை கொளுத்திக்கொண்டிருக்கும்போதே எங்களை கைது செய்த தமிழக அரசு பதினைந்து நாள் புழல் சிறையில் அடைத்தது.

உலக வரலாற்றில் இன உரிமைப் புரட்சி, விவசாய புரட்சி, தொழிலாளர் புரட்சி, மாணவர் புரட்சி என எத்தனையோ நடந்திருந்தாலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நடந்த ஒரே புரட்சி "ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் புரட்சிதான் ".

ஆகவே மே 22 ல் நம் இரத்த சொந்தங்கள்
உயிர் துறந்து
பெற்றுத் தந்த
சுவாசக்காற்றைக் காத்திட தமிழ்நாட்டின் கருப்பு தினமான
மே 22- இல்  கருப்பு நிற
முக கவசம் அணிவதோடு நீர், நிலம், காற்று, கடல், பிறந்த மண்  காக்க உயிர் துறந்த 15 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளின் தியாகங்கள் நினைக்கப்படும் நோக்கில், வீடுகள் தோறும் குடும்பத்துடன் மெழுகுவர்த்தி ஏந்துவோம்.

மே 22 ஐ
"உயிர்ச்சூழல் பாதுகாப்பு தினமாக" கடைபிடிப்போம் என்பதோடு ஸ்டெர்லைட் கட்டிடத்தின் கடைசி "செங்கல்" அகற்றப்படும் வரை  எம் மக்களோடு தமிழ்ப் பேரரசு கட்சி இறுதிவரை உறுதியோடு நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வ.கௌதமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
"சோழன் குடில்"
21.05.2020

இணைப்பு :