மேற்பார்வை என்றால் என்ன? கால அவகாசம் என்றால் என்ன?

வியாழன் மார்ச் 21, 2019

சிங்காரிதான் காவேரி. காவேரிதான் சிங்காரி என்றொரு சினிமாப் பாடல் உண்டு.

இரு நிலைத் தன்மையை ஒரு நிலைத்தன்மையாகக் கூறுகின்ற மரபு நம்தமிழ் மொழியில் இருப்பது கண்கூடு.

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே என்ற திருமூலரின் பாடலில்  அன்பும் சிவமும் ஒன்று என்பதாகக் கூறப்படுகிறது.

ஆக, இருநிலை வடிவங்களை ஒரு வடிவம் ஆக்குகின்ற வழமை நம் தமிழ் மொழியில் இருப்பது இதிலிருந்து உறுதியாகிறது.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இருவேறுபட்ட விடயங்களில் ஒன்றை நீக்கி இன்னொன்றை இரண்டுக்குமான பொது வடிவமாகக் காட்ட முற்படுகின்றார்.

அதாவது ஐ.நாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் கொடுக்கப்படவில்லை. மாறாக ஐ.நாவின் மேற்பார்வை நீடிக்கப்படுகிறது என்பதாக அவரின் கருத்து அமைந்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை விதித்த நிபந்தனைகளை சிறீலங்கா அரசு நிறைவேற்றாத நிலையில், ஏலவே இரண்டு ஆண்டு கால அவகாசத்தை இலங்கை பெற்றிருந்தது.

அந்த இரண்டு ஆண்டு கால அவகாசம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிந்து விடுகிறது.

எனினும் ஐ.நா மனித உரிமை பேரவை விதித்த நிபந்தனை எதனையும் சிறீலங்கா அரசு நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் தமக்கு இன்னொரு கால அவகாசம் வேண்டுமென சிறீலங்கா அரசு கோரிக்கை முன்வைத்துள்ளது.

நிலைமை இதுவாக இருக்கையில், கால அவகாசம் வழங்கக்கூடாது என்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களினதும் கோரிக்கை.

இதற்காக சர்வதேசத்தின் கவனயீர்ப்புக்கான போராட்டங்களையும் தமிழ் மக்கள் நடத்தி வருகின்றனர்.

இதேவேளை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில், சிறீலங்கா அரசு ஏமாற்றுகிறது.

எனவே சரியானதும் பொருத்தமானதுமான நடவடிக்கை தேவை என்பதாகத்தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறீலங்கா அரசுக்குக்கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறது.

எப்படியும் கால அவகாசம் பெற்றுத்தருவோம் என்று சிறீலங்கா அரசுக்குச் சத்தியம் செய்து கொடுத்தவர்கள் போல கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்.

கால அவகாசம் வழங்கக்கூடாது என ஒட்டு மொத்தத் தமிழ்த் தரப்பும் கூற, இல்லை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூட்டமைப்புக் கூறுவதானது, கூட்டமைப்பின் அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல என்ற நிலையில்;

இப்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஐ.நா மனித உரிமை பேரவை வழங்குவது கால அவகாசமல்ல மாறாக ஐ.நாவின் மேற்பார்வையை நீடிப்பதாகும் எனக் கூறியுள்ளார்.

கால அவகாசம் என்பது கால அவகாசமல்ல. அது ஐ.நாவின் மேற்பார்வை. எனினும் மேற்பார்வை என்பது கால அவகாசம் எனத் தவறாகப் புரியப்பட்டுள்ளது என்பது அவரின் கருத்து விளக்கம்.

ஆக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் மொழிவழியில் கூறுவதாயின்; சிறீலங்கா அரசு ஐ.நாவிடம் கால அவகாசம் கோரவில்லை. மாறாக தங்களை ஐ.நா மேற் பார்வை செய்ய வேண்டும் என அரசு  கேட்கிறது என்பது பொருளாகிறது.

நிலைமை எப்படியிருக்கிறது என்பது தமிழ் மக்களுக்கே வெளிச்சம்.

-வலம்புரி-