மஹிந்தவிற்கு பகிரங்க அழைப்பு விடுத்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

புதன் அக்டோபர் 20, 2021

நாட்டை   கட்டியெழுப்ப பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாட்டை மீ்ண்டும் கைப்பற்ற வேண்டும் என தேசத்தின் பாதுகாப்புக்கான மக்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்  தெரிவித்துள்ளார். 

கோட்டாபய ராஜபக்சவின்(Gotabhaya Rajapaksha) சுபீட்ச நோக்குடன் நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று நினைத்தாலும், 200 சதவீத மக்கள் தற்போது அரசாங்கத்தால் ஏமாற்றமடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகித்தாலும் நாட்டை கட்டியெழுப்ப அனுபவமிக்க மஹிந்த ராஜபக்ச அவசியம். மஹிந்த ராஜபக்சவால் மட்டுமே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.

இரசாயன உர இறக்குமதி தடையால் நாட்டினுடைய விவசாய நடவடிக்கைகள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. தான்தோன்றித்தனமான முடிவே இதற்கு காரணம். 

மஹிந்த ராஜபக்சவை நம்பியே 69 லட்சம் மக்கள் வாக்களித்தனர். நாட்டை பாதுகாக்க நினைத்தால் மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அரசாங்கத்திற்கு எதிராக நாலா பக்கங்களிலும் இருந்து எதிர்ப்புகள் வலுப் பெறுவதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும்.  நான் கட்டிய வீட்டில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

இந்தநிலையில், கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரச ஆட்சிக்குக் கொண்டு வருவதில் முன்னின்று செயற்பட்டவர்களுள் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கின்றார்.

எனினும் கடந்த சில காலங்களாக அரசாங்கத்திற்கு எதிராக கடும் விமர்சனங்களை இவர் முன்வைத்து வருவதுடன் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி வருகின்றார்.

மேலும், இந்த அரசாங்கம் தற்போதைய சூழலில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் இந்த அரசின் எதிர்காலத்திற்கு அது பாதிப்பாக அமையும் எனவும் அவர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.