மீண்டும் இனவெறி சர்ச்சை! இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அவுஸ்திரேலியா-

ஞாயிறு சனவரி 10, 2021

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி டி-20, ஒரு நாள் தொடர்களையடுத்து தற்போது டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. 

சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக 2வது மற்றும் 3வது நாள் ஆட்டங்களின் போது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலிய ரசிகர்களால் இந்திய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இனவெறி ரீதியில் இழிவுபடுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்திய அணி தரப்பில் ஐசிசி மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 4வது நாள் ஆட்டத்தின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை ரசிகர்கள் நிறவெறியுடன் இழிவுபடுத்தியதாக புகார் எழுந்தது.

இதன் காரணமாக போட்டியின் போது ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. நடுவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையாளர்கள் அரங்கிற்கு சென்று குறிப்பிட்ட பார்வையாளர்கள் 6 பேரை வெளியேற்றினர், இதன் பின்னரே போட்டி தொடர்ந்து நடைபெற்றது.

சிட்னி மைதானத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இந்திய வீரர்கள் மீதான நிறவெறி விமர்சனங்களை ஆவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கண்டித்துள்ளது. இது தொடர்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் பாதுகாப்பு தலைமை அதிகாரி சீன் காரோல் கூறுகையில், இது போன்ற நிறவெறியை தூண்டும் செயல்களை அவுஸ்திரேலியா நிர்வாகம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை நிர்வாகம் வரவேற்காது.

இச்சம்பவத்திற்காக இந்திய கிரிக்கெட் நண்பர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பையும் கோருகிறோம். அதே நேரத்தில் தகுந்த நடவடிக்கையும் நாங்கள் எடுப்போம் என சீன் காரோல் தெரிவித்தார்.