மீண்டும் ஜெனீவா நாடகம்!

செவ்வாய் பெப்ரவரி 25, 2020

சென்று போராடுவோம் என சொல்லி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த நான்கரை வருட காலமாக தாம் உருவாக்கிய அரசாங்கத்தில் உறங்கிவிட்டு இப்பொழுது எழுந்து நின்று தூசி தட்டி மீண்டும் ஜெனீவா பிரச்சினையை முன்நிறுத்தி மக்களை ஏமாற்ற முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, 2009 ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னரான விடுதலைப் புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின், தங்களை உருவாக்கிய புலிகளை இன்று ஏளனம் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, பத்து வருட காலமாக அரசியல் விடுதலையைப் பெற்றுக் கொடுக்கின்றோம் என்று எமது மக்களை ஏமாற்றி வருவது நாடறிந்த உண்மை. கடந்த நான்கு வருடங்களில் தாம் உருவாக்கிய அரசாங்கத்தில் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் எமது மக்களுக்கான எவ்வித அரசியல் மாற்றங்களையும் முன்னெடுக்காமல் இன்று மஹிந்த அரசாங்கம் வந்தவுடன் தமிழ் தேசியத்தை கையில் எடுத்து தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

ஜெனீவா விவகாரத்தை தெளிவான முறையில் தாங்கள் உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூலமாக செவ்வனே தீர்த்து வைத்திருக்கலாம். ரணில் விக்கிரமசிங்கவிற்கு தோழனாக விளங்கும் சுமந்திரன் போன்றவர்களை முன்நிறுத்தி தமிழ் தேசியத்தை இல்லாதொழித்து விட்டார்கள்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஒன்பது தமிழ் வேட்பாளர்களுடன் வன்னி மாவட்டத்தில் களமிறங்குவதற்கு தயாராக உள்ளது. இந்த தேர்தலில் உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்கும் சம நிலைப்பாடுகளைக் கொண்ட வன்னி மக்கள் எமக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கின்றார்கள். சந்தர்ப்பத்திற்காக நிறம் மாறும் அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு மக்கள் எமக்கு இரண்டு ஆசனங்களுக்கு அதிகமான வாக்குகளை வழங்க தயாராக உள்ளனர்.

எனவே, ஜெனீவா பிரச்சினையை வைத்து மீண்டும் அரசியல் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் போலி முகத்திரையை வன்னி மாவட்ட தமிழ் மக்கள் களைவதற்கு தயாராக இருக்கின்றார்கள் என்ற செய்தியை கூட்டமைப்பினருக்கு வன்னி மாவட்ட மக்கள் சார்பாக நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.