மீண்டும் கே.பி கும்பலைக் களமிறக்கிய சிங்களம்! போராட்ட ஆவணங்கள் வெளிவருவதைத் தடுப்பதற்குப் பகீரத பிரயத்தனம்!

வெள்ளி நவம்பர் 29, 2019

புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் வெளிவருவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் கே.பி கும்பலை சிங்களம் களமிறக்கி விட்டுள்ளது.

இந் நடவடிக்கைகள் நோர்வேயில் வசிக்கும் கே.பியின் வலது கரமான  சர்வே என்பவரின் நேரடி நெறிப்படுத்தலில், சுவிற்சர்லாந்தில் வசிக்கும் தாஸ் என்ற பெயருடைய முன்னாள் போராளி ஒருவரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Photo1

தாஸ் என்ற குறித்த முன்னாள் போராளி 1995 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு விலகி, பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிக்கலைப் பிரிவில் புகைப்படப் பிடிப்பாளராக சம்பளத்திற்குப் பணி புரிந்த ஒருவர் ஆவார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகுவதற்கு முன்னர் ஒரு கால் செயலிழந்ததால் இவரால் சுயமாகக் களமுனைகளுக்குச் சென்று புகைப்படம் பிடிப்பதோ, அன்றி பயணம் செய்வதோ இயலாத காரியம் ஆகியது.

இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வாகனங்களில், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் அழைத்துச் செல்லும் இடங்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொடுக்கப்படும் பணத்திற்காகப் புகைப்படம் பிடிப்பவராக இவர் விளங்கினார்.

இவர் எடுத்த படங்கள் இவரது ஆக்கங்களாக அமைந்தாலும் இப் படங்களுக்கான உரிமம் தமிழீழ விடுதலைப் புலிகளுடையதாகும். இவற்றுக்கு உரிமை கோரும் தகுதி இவருக்கு அறவே கிடையாது.

வன்னியில் தங்கியிருந்த பொழுது இவருக்கு இருந்த ஒரேயொரு வருமானம் தமிழீழ விடுதலைப் புலிகள் கொடுத்த சம்பளம் மட்டுமே.

இவரிடம் சொந்தமாக செய்கோள் தொலைபேசியோ அன்றி இணைவலை இணைப்போ, ஏன் ஒளிப்படக் கருவிகளோ இருந்ததில்லை.எல்லாமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானவையாகும்.

எனினும் 18.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியைச் சிங்களப் படைகள் ஆக்கிரமித்த பொழுது அங்கிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிக்கலைப் பிரிவுக்குச் சொந்தமான ஒளிப்படக் கருவிகள் பலவற்றையும் சிங்களப் படையினர் கைப்பற்றினர்.

இச் சந்தர்ப்பத்தில் சிங்களப் படைகளிடம் சரணடைந்த தாஸ் என்ற குறித்த நபர், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிக்கலைப் பிரிவின் மேலும் பல ஆவணங்கள் பலவற்றை சிங்களப் படைகள் அகழ்ந்தெடுப்பதற்கு உதவியதோடு, பல போராளிகளையும் காட்டிக் கொடுத்து அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படவும் காரணமாகினார்.

இதற்குச் சன்மானமாக அவரை விடுதலை செய்த சிங்களம், 2013 ஆம் ஆண்டு வரை கிளிநொச்சியில் இவரைத் தமது உளவாளியாகப் பயன்படுத்தியது.

இதன் பின்னர் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு உறங்குநிலை உளவாளியாக அமைதி காத்த இவர், தற்பொழுது நோர்வேயில் வசிக்கும் கே.பி கும்பலின் பிரமுகரான சர்வே அவர்களின் வழிநடத்தலில், மாத்தையாவின் விசுவாசியான ரவியின் உதவியுடன் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் வெளிவருவதைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

அதிலும் குறித்த ஆவணங்களில் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டால், உடனே அவற்றை வெளியிட்ட அமைப்புக்களைத் தொடர்பு கொள்ளும் இவர், இவற்றுக்கான உரிமம் தனக்கே உண்டு என்று உரிமை கோருவதோடு, அவற்றைத் தனது அனுமதியின்றி வெளியிட்டால், அல்லது தனக்குக் கப்பம் தர மறுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி வருகின்றார்.

குறிப்பாக, யுத்தத்தின் முடிவில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒளிப்படக் கருவிகள் பல சிங்கள அரசின் வசம் இருப்பதால், தேவையேற்படும் பொழுது இவற்றின் மின்னியல் பொறித் தடங்களைக் கொழும்பில் தன்னை வழிநடத்தும் சிங்களப் புலனாய்வாளர்கள் ஊடாகத் தருவித்து இவற்றுக்கான உரிமம் தன்னுடையது என்று பலரை இவர் மிரட்டி வருகின்றார்.

அத்தோடு முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவில் பொதுமக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் கொடுத்து அனுப்பிய ஒளிப்படங்களின் சேமிப்புக் கருவிகள் பலவும் இவரால் சில புல்லுருவிகளின் உதவியுடன் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இவரது தேச விரோத நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை கே.பியின் பிரமுகரான சர்வே நேரடியாகக் களத்தில் இறங்கி வழங்குவதோடு, இவருக்கான பரப்புரைகளை மேற்கொள்வதற்கும், தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் நிக்கராவெட்டிய வங்கிக் கொள்ளைக்குத் தலைமை தாங்கிய தற்பொழுது பிரான்சில் வசிக்கும் புளொட் ஒட்டுக்குழுவின் பிரமுகர் ஒருவரும் பயன்படுத்தப்படுகின்றார்.

கே.பி கும்பலின் பக்கபலத்துடன் சிங்களத்தால் களமிறக்கப்பட்டுள்ள தாஸ் என்ற குறித்த நபர் விடுதலைப் போராட்ட ஆவணங்கள் வெளியிடப்படுவதற்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றங்களின் ஊடாகத் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டால், இவரது சிங்களப் புன்புலத்தை அம்பலப்படுத்துவது இலகுவாக அமையும் என்றும், எனவே இவரது மிரட்டல்களுக்கு எவரும் அஞ்சத் தேவையில்லை என்றும் காப்புரிமம் தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற சட்ட அறிஞர்கள் சங்கதி-24 இணையத்திற்கு அறியத் தந்துள்ளனர்.

ஏற்கனவே பிரான்சில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவரின் பாதுகாப்பில் இருந்த ஆவணக் காப்பகம் 2012ஆம் ஆண்டு கே.பி கும்பலைச் சேர்ந்த சிங்களக் கைக்கூலிகளால் உடைக்கப்பட்டு அங்கிருந்த ஆவணங்கள் சூறையாடப்பட்டு இல்லாதொழிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது புதிய வடிவில் ஆவணங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் கே.பி கும்பல் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.