மீண்டும் நிரூபிக்கப்பட்டசிறீலங்காவின் அதிகாரம்!

செவ்வாய் ஜூன் 18, 2019

சிறீலங்காவின் ஆட்சியில் பேரினவாதம் கொண்ட அரசியல் தலைவர்கள் வீற்றிருந்தாலும் அந்நாட்டில் முடிவெடுக்கும்,ஆட்டிப்படைக்கும் அதிகாரம் படைத்த சக்திகளாக எப்போதும் பெளத்த பேரினவாதப் பிக்குகளே இருக்கின்றார்கள் என்பது மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

1959ம் ஆண்டு சிறீலங்காவின் பிரதமர் பதவியில் இருந்த சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்க,தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஞானசார பெளத்த பிக்குவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

1111

தங்கள் கட்டுப்பாட்டை மீறிச் செயற்படும் அதிகாரம் கொண்டவர்களின் உயிரையும் எடுக்கத் தயங்கமாட்டோம் என்பதை இதன் மூலம் உலகிற்கு காண்பித்தனர் பெளத்த பிக்குகள்..

தமிழர்களுக்கு சாதகமாக எதாவது நடந்துவிடும் என்ற நிலைமைகள் தோற்றம்பெறும் போதெல்லாம் தங்கள் அதிகார பலத்தைப் பாவித்து அதனை அடக்குவதில் இந்தப் பெளத்த பிக்குகள் எப்போதும் பின் நிற்பதில்லை1950களில் தமிழைப் புறக்கணித்து தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்தவர் பண்டாரநாயக்க.இதனால் எழுந்த நெருக்கடிகளைச் சமாளிக்க செல்வநாயகத்துடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டார்.

ஆனால், பண்டா,செல்வா உடன்படிக்கைக்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன் பெளத்த பிக்குகள் எதிர்ப்புத் தெரிவித்து போராடியதையடுத்து இறுதியில் அதனைக் கிழித்தெறிந்தார்.

இதன்மூலம் சிங்கள ஆட்சியாளர்களை விடப் பலம் பொருந்தியவர்கள் பெளத்த பிக்குகள் என்ற தோற்றப்பாடு மட்டுமல்ல,அதுதான் உண்மை என்ற நிலைமையும் இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.

பெளத்த பிக்குகளின் விருப்பத்தை மீறிச் செயற்படுவதென்பது தற்கொலைக்கு சமமானது என்பதும் பண்டரநாயக்கவிற்கு ஏற்பட்ட நிலையையே தங்களுக்கும் ஏற்படுத்தும் என்பதும் இன்று சிங்கள ஆட்சியில் அமரும் ஒவ்வொரு தலைவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

இதனால்தான் வெற்றிபெற்றதன் பின் பெளத்த மதத் தலைவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றே ஆட்சியில் அமர்கின்றார்கள்.‘ஆட்சி தங்கள் கையில்,அதிகாரம் அவர்கள் கையில்’ என்ற நிலையில்தான் சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் நிலைமை இருக்கின்றது.

இந்த உண்மை கடந்த வாரம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.  

கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர், முஸ்லீம்கள் பக்கம் திரும்பியிருக்கும் கொடூரப் பார்வையைத் தமக்குச் சாதமாக்கி, அதிகாரம் கொண்ட முஸ்லீம் தலைமைகளைக் கட்டுப்படுத்த பெளத்த பேரினவாதம் முயன்றுள்ளது.

கடந்த வாரம் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக பெளத்த பிக்குவான நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், சிறீலங்காவின் அமைச்சர்  ரிஷாத் பதியூதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஷ்புல்லாஹ், மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். அவர் சாகும் வரை சிறீலங்காவின் எந்தவொரு அரசியல் தலைவரும் விட்டுவிடப்போவதில்லை என்பது உலகறிந்த உண்மை.

இதற்குள், அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டத்திற்கு  24 மணித்தியாலத்திற்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்திய பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர், இந்த விடயத்தில் அரசாங்கம் ஒருதலைப் பட்சமாக செயற்பட்டால் நாடு தழுவிய ரீதியில் பெளத்த பிக்குகள் பெரும் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என கடுமையாக எச்சரித்தார்.

அத்துடன், இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசியல்வாதிகள் தலையிடத் தேவையில்லை. மதத் தலைவர்களால் தீர்த்து வைக்க முடியும் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறீலங்கா அரசியல் தலைவர்களுக்கும் அறிவித்தார்.

இவ்வாறு கடும்போக்கு பெளத்த மதவாதத் தலைவர்கள் ஓரணியில் இணைந்து அச்சுறுத்தல்களையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தத் தொடங்கிய நிலையில்,அந்த மூவரும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இதனைச் சாதமாக்கி அரசியல் இலாபம் தேட முனைந்த ஏனைய முஸ்லீம் தலைவர்கள் தாங்களும் பதவி விலகுவதாக அறிவித்தனர்.  

பெளத்த பிக்குகளின் இந்த எச்சரிக்கையை கட்டுப்படுத்தி, முஸ்லீம் தலைமைகள் பதவி விலகுவதை தடுக்கும் சக்தியற்ற சிறீலங்காவின் ஆட்சியாளர்கள், பெளத்த பிக்குகளிடமே அதிகாரம் இருக்கின்றது என்பதை இதன்மூலம் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.

111

அதிகாரம் பெளத்த பேரினவாத மதத் தலைவர்களிடம் இருக்கும்போது, நீதியை சிங்கள அரசியல் தலைவர்களிடம் எதிர்பார்த்து காத்திருப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான செயல். சிறீலங்கா ஆட்சியாளர்களால் தமிழ் மக்களுக்கு நீதியைத் தரமுடியாது.

பெளத்த மதத் தலைவர்களிடம் இருந்து தமிழ் மக்கள் நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியாது.

சர்வதேசத்தின் தலையீடின்றி என்றுமே தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்துவிடப்போவதில்லை என்பதைத்தான் சிறீலங்காவின் ஆட்சியும் அதிகார பலமும் சொல்லி நிற்கின்றது.

ஆசிரிய தலையங்கம்
நன்றி: ஈழமுரசு