மீண்டும் படகுகளில் தஞ்சமடைய முயலும் ரோஹிங்கியா அகதிகள்

திங்கள் மே 25, 2020

ரோஹிங்கியா அகதிகள் விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் பல நாடுகளுக்கு அழுத்தம்  கொடுத்து வரும் நிலையில், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் Bali செயல்முறையின் கீழ் என பேச்சுவார்த்தையினை நடத்த திட்டமிட்டுள்ளன. 

2015ம் ஆண்டில் நூற்றுக்கணக்கான அகதிகளின் உயிரிழப்பிற்கு வித்திட்டுச் சென்ற அகதிகள் நெருக்கடி போல் மீண்டும் ஒரு நெருக்கடிக்கான வாய்ப்பு உருவாகியுள்ள சூழலில் இப்பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

கொரோனா பதற்றம் நிலவிவரும் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மலேசியா, தாய்லாந்து எல்லைகளில் தஞ்சமடைய முயன்ற 300க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை அந்நாட்டு அரசுகள் நிராகரித்திருந்தன. இவர்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்து வந்த நிலையில் வங்கதேச அரசால் மீட்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த விவகாரம், தற்போது ஆஸ்திரேலியா- இந்தோனேசியா நாடுகளின் உயர்மட்ட அளவில் விவாதிக்கப்பட்டு வருவதாக இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி Achmad Rizal Purnama தெரிவித்திருக்கிறார். இந்த நிலையிலேயே Bali செயல்முறையின் கீழ் பேச்சுவார்த்தை நடக்கக்கூடும் எனக் கூறப்படுகின்றது. 

Bali செயல்முறை என்பது ஆட்கடத்தல், மனித கடத்தல், நாடுகளுக்கு இடையே நடக்கும் குற்றம் தொடர்பாக விவாதிப்பதற்கும் அது தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் 2002ல் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச மன்றமாகும். இதில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் முதன்மையாக செயல்பட்டு வரும் நிலையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பு நாடுகளாக செயல்படுகின்றன.