மீண்டும் தேசிய அரசாங்கம்: ரணிலின் புதுக்கணக்கு!

வியாழன் ஏப்ரல் 04, 2019

தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமைப்பது தொடர்பிலான இணக்கப்பாடொன்று, ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.   

ராஜபக்‌ஷக்கள் கூடாரத்துக்குள் நுழைவதென்றால், பதவிகள், அதிகாரங்கள் மீதான எதிர்பார்ப்பின்றி, நிராயுதபாணியாகவே மைத்திரி இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டுவிட்டது.   

நிபந்தனையை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை, மைத்திரி தரப்பால், பலமுறை விடுக்கப்பட்ட போதும், அதை ஏற்பதற்கான எந்தவித சமிஞ்ஞைகளையும் ராஜபக்‌ஷ கூடாராம் காட்டவில்லை. ஒருவேளை, நிபந்தனைகளைத் தளர்த்திக் கொண்டு, மைத்திரியை இணைத்தால், அவர் மீண்டும் ஒட்டகமாக மாறி, கூடாரத்தை கிழித்துவிடும் சாத்தியம் இருப்பதாக, பஷில் ராஜபக்‌ஷ, ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கருதுகிறார்கள்.  

 அதனால், அதிகாரமற்ற ஒருவராகத் தங்களுக்கு இணங்கி நடக்கும் ஒருவராக வேண்டுமானால் மைத்திரி, வந்து கொள்ளட்டும். இல்லையென்றால், அவர் இன்றைக்கு இருக்கும் இடத்திலேயே இருந்து கொள்ளட்டும் என்கிற நிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அதற்கு, அவர்கள் கோட்டாபய ராஜபக்‌ஷவை முன்னிறுத்திக் கொண்டு, ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு எடுத்துவிட்ட தீர்மானம் முக்கியமான சாட்சி.  

ராஜபக்‌ஷ கூடாராத்தைப் பொறுத்தவரையில், கடந்த சில ஆண்டுகளாகவே தங்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பிரதமர் பதவி என்பது மஹிந்தவுக்கானது என்கிற நிலை உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.   

அப்படியான நிலையில், மைத்திரியின் சதிப்புரட்சிக்கு மஹிந்த இணங்கியது, கோட்டாவை விடவும் தனக்கும் தன்னுடைய மகனுக்கும் அச்சுறுத்தல் குறைந்த நபராக மைத்திரி இருப்பார் என்ற நிலைப்பாட்டின் போக்கிலாது. அதுவே, அவரை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்கவும் அப்போது மஹிந்தவைத் துணிய வைத்தது.   

ஆனால், சதிப்புரட்சியின் தோல்வி, மைத்திரியை மக்கள் மத்தியில் கோமாளியாக்கி விட்டது. அத்தோடு, தன்னுடைய ஆதரவுத் தளத்தின் மீதும், குறிப்பிட்டளவு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டதாக மஹிந்த நினைக்கிறார். இதனாலேயே, வேண்டாவெறுப்பாகக் கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு இணங்கினார்.   

அப்படியான கட்டத்தில், பிரதமர் பதவியைக் குறிவைத்துக் கொண்டு, ராஜபக்‌ஷ கூடாரத்துக்குள் மைத்திரி வரும் போது, அது சாத்தியமான ஒன்றல்ல. அதனால்தான், மைத்திரிக்கான கதவு ராஜபக்‌ஷ கூடாரத்தால் சாத்தப்பட்டது.  

அத்தோடு, இனி வரிசையாகத் தேர்தல்கள்தான் வரப்போகின்றன. முதலில் நடைபெறப்போவது, ஜனாதிபதித் தேர்தல். அப்படியான நிலையில், வெற்றி வேட்பாளருக்கான அவசியம் என்கிற விடயம், அனைத்துத் தரப்புகளுக்குள்ளும் பிரதானமானது.   

ஏனெனில், ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுவிட்டு, அடுத்த சில மாதங்களிலேயே வரப்போகும் பொதுத் தேர்தலை வெற்றி கொள்வது என்பது, அவ்வளவு இலகுவானதல்ல. அப்படி வெற்றி கொண்டாலும், ஆட்சி அமைப்பதற்கான நாடாளுமன்ற எண்ணிக்கையைக் கொண்டிருப்பது என்பது குதிரைக்கொம்பாகவே இருக்கும்.  

அப்படியான நிலையில், சிறுபான்மைக் கட்சிகளின் வகிபாகம் என்பது, முக்கியமானதாக மாறும். அவர்கள், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் எவ்வாறான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதும், அதன் தாக்கங்கள் என்னவாக இருக்கும் என்பதும் பொதுத் தேர்தல் வரை எதிரொலிக்கும்.   

அப்படியான நிலையில், வெற்றி வாதத்தைத் தக்க வைப்பதற்கும், ஆட்சியைப் பிடிப்பதற்கும் வெற்றிகரமான வேட்பாளரும் கூட்டும் செயற்பாட்டுத் திறனும் முக்கியமானது. அது, இன்றுள்ள மைத்திரி தரப்பிடம் இல்லை என்று ராஜபக்‌ஷ ‘கூடாரம்’ நினைக்கிறது. அதனால், மைத்திரி அந்தத் தரப்பால் புறந்தள்ளப்பட்டு விட்டார்.  இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ரணில் தன்னுடைய அரசியல் இருப்பைப் பலப்படுத்துவது சார்ந்து, சிந்திக்கத் தலைப்படுகிறார். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்கிற குழப்பம், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கடந்த சில ஆண்டுகளாகவே நீடித்து வருகின்றது.   

சதிப்புரட்சி காலத்தில், கட்சியையும் அரசாங்கத்தையும் ஒன்றிணைந்து பாதுகாத்தார்கள் என்கிற நிலையில், ரணிலும் சஜித்தும் ஆதரவாளர்களால் போற்றப்பட்டார்கள். ஆனால், அந்த ஒற்றுமை என்பது, இருவருக்கும் இடையில் காணப்பட்ட அடுத்த ஜனாதிபதித் தேர்தல், பிரதமர் பதவிகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருந்தது.   

ஆனால், ஆட்சியை மீளவும் நிறுவிய பின்னர், ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான உறவுமுறையில் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. இரண்டு பேரும் ஜனாதிபதி வேட்பாளராகத் தங்களை முன்னிறுத்துவது சார்ந்து, குறிப்பாக ஆதரவாளர்களைக் கொண்டு, கட்சிக்குள் அழுத்தங்களைச் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.  

கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் சிறுபான்மை மக்களிடமும் வாக்கைப் பெறும் சக்தி, ரணிலிடம் இருந்தாலும் அவரால் பெரும்பான்மையான தென்இலங்கையின் மத்தியதர மக்களின் வாக்குகளைப் பெறுவது என்பது அவ்வளவுக்கு சாத்தியமில்லாத ஒன்று. அதுவும் ராஜபக்‌ஷக்களின் போர்வெற்றி வாதத்துக்கு முன்னால், அவரால் வெற்றி வேட்பாளராக நிற்க முடியுமா என்கிற கேள்வி இயல்பாகவே எழும்.   

அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டே, சஜித்துக்கான முக்கியத்துவம் கூடுகின்றது. ஹம்பாந்தோட்டையிலிருந்து வரும் ஒருவராக, அந்நியத் தோற்றத்தையோ, நடவடிக்கையையோ கொண்டிராத ஒருவராக, சஜித்தை தென்இலங்கையின் மத்தியதர வர்க்கம் ஏற்றுக்கொள்வதில் பிரச்சினை இருக்காது. அது, வாக்குகளையும் வெற்றிபெறுவதற்கான அளவுக்கு பெற்றுக்கொடுக்கும் என்கிற நம்பிக்கை உண்டு.   

அப்படியான நிலையில், வெற்றி வீதம் அதிகமான ஒருவரை விடுத்து, வெற்றி வீதம் குறைந்த ஒருவரை ஜனாதிபதி வேட்பாளர் ஆக்குவதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். அப்படியான நிலையில்தான், ரணிலைத் தாண்டியும் சஜித் முக்கியத்துவம் பெறுகிறார்.  

இத்தகைய கட்டத்தைக் கடக்கும் நோக்கில், ரணில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு என்கிற ஜே.வி.பியின் கோரிக்கைக்கு இணங்க நினைக்கிறார். அதன்மூலம், அதிகாரங்களற்ற ஜனாதிபதி பதவியில் யார் இருந்தாலும் தனக்குப் பிரச்சினையில்லை என்று நினைக்கிறார். அதற்காக அவர், மைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக முன்னிறுத்துவது சார்ந்தும் யோசிக்கிறார்.   

அதன்போக்கிலேயே, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் நோக்கில், மைத்திரி ஆதரவு சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு, தேசிய அரசாங்கத்தை அமைக்க எண்ணுகிறார். பதவியே இல்லாமல் இருப்பதற்குப் பெரிய அதிகாரங்கள் இல்லாவிட்டாலும், கௌரவமான நிலையில் மதிக்கப்படும் ஜனாதிபதி பதவியைப் பெறுவதற்காக ரணிலோடு இணக்கமான உறவைப் பேணுவதில் தப்பில்லை என்று மைத்திரி நினைக்கிறார்.   

ஏனெனில், ரணிலுக்கும் மைத்திரிக்கும் சொந்தக் கட்சிக்குள்ளேயே நெருக்கடிகள் அதிகரித்திருக்கின்ற நிலையில், மாற்று வழிகள் ஏதுமின்றி, தேசிய அரசாங்கம் என்கிற கட்டத்தை நோக்கித் தங்களை நிலைப்படுத்திக் கொள்ள முனைகிறார்கள் என்று கொள்ளலாம்.  

ஆனால், சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான ஆதரவாளர்களும் 70 சதவீதமான முக்கியஸ்தர்களும் ராஜபக்‌ஷக்களின் பின்னால் சென்றுவிட்டார்கள். அப்படியான நிலையில், மைத்திரியின் பின்னால் இருப்பது 20- 30 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆகும். அவர்களையும் தங்களோடு இணைத்துக் கொள்வது தொடர்பில், ராஜபக்‌ஷக்கள் தொடர் பேச்சுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  

துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட 10 முதல் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமே ராஜபக்‌ஷக்களால் பேரங்களின் மூலம் படியவைக்க முடியாது என்கிற நிலை தற்போது காணப்படுகின்றது. ஏனெனில், அவர்களும் மைத்திரியின் ஆதரவாளர்கள் என்கிற நிலையைத் தாண்டி, அவர்கள் சந்திரிகாவின் ஆதரவாளர்கள்; ராஜபக்‌ஷக்களை ஆரம்பத்திலிருந்து எதிர்த்தவர்கள்.  

இன்னொரு பக்கம், மைத்திரியைக் கையாள்வதற்காக ரணிலே வளர்த்துவிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள், இன்றைக்கு ரணிலாலேயே கையாள முடியாத தரப்பாக வளர்ந்து நிற்கின்றனர்.   
அவர்கள், என்றைக்குமே மைத்திரியோடு இணைந்துகொண்டு, அரசாங்கத்தை எப்படிச் சகித்துக் கொள்வார்கள் என்கிற கேள்வி எழுகின்றது. அவர்கள், சஜித்துக்குப் பின்னால் அணி திரள்வதையே விரும்புகிறார்கள். ஏனெனில், ரணிலைச் சுற்றியுள்ள, கொழும்பை மய்யப்படுத்திய ‘சீனியர்’களின் ஆதிக்கம் கட்சியையும் ஆட்சியையும் ஆட்டம் காண வைத்துவிடும் என்று நினைக்கிறார்கள்.   

அப்படியான நிலையில், அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்காக தேசிய அரசாங்கத்துக்கு ஒத்துழைத்தாலும், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், ரணிலின் திட்டங்களுக்கு, இணங்குவதற்கான வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவு.   

கரு ஜயசூரிய என்கிற தெரிவை முன்வைத்து, ரணில் நகர்த்திய காய், வெட்டப்பட்ட நிலையிலேயே, தேசிய அரசாங்கம் என்கிற கட்டத்தில் நின்று, காய்களை நகர்த்த ரணில் நினைக்கிறார். ஆனால், அது அவ்வளவு சுலபமான ஒன்றாகவோ, மக்களுக்கு உவப்பான ஒன்றாகவோ இருக்கப்போவதில்லை.   

  • புருஜோத்தமன் தங்கமயில்