மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா! ஒன்றிய அரசு எச்சரிக்கை-

செவ்வாய் ஜூன் 28, 2022

புதுடெல்லி- கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொற்று பரவல்

இரண்டு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்த கொரோனா தொற்று பரவல் தற்போது தான் குறைந்துள்ளது. இதனால் அனைத்துக் கட்டுப்பாடுகளும் விளக்கி கொள்ளப்படுவதாக மாநில அரசுகள் அறிவித்திருந்தது.

சுற்றுலா தளம்

இதனையடுத்து மக்கள் முககவசம், தனிநபர் இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளின்றி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். மேலும் வழிபாட்டுத்தலம், சுற்றுலா தளம், திரையரங்குகள், வணிக வளாகங்கள் என அனைத்துக்கும் 100% செயல்படலாம் என அனுமதி அளித்துள்ளது ஒன்றிய அரசு.

அதிகரித்து

இந்த நிலையில் சிறிது நாட்களாகவே இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசும் கொரோனா தொற்று பரவலை தடுக்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் ராஜேஷ் பூஷன் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

நடவடிக்கை

அதில், இந்தியாவில் வரும் மாதங்களில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள், யாத்திரைகள் நடைபெற உள்ளது. அங்கு கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திருவிழா

மாநில அரசுகள் வரக்கூடிய நாட்களில் பரிசோதனை, கண்காணிப்பு, தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், திருவிழா மற்றும் பாதயாத்திரைகள் நடைபெறும் பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதோடு, ஆர்.டி.பி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி

தடுப்பூசி செலுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், பொதுக்கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் காற்றோட்ட வசதி உள்ள இடங்களாக இருக்க வேண்டும் என்றும், மருத்துவ வசதி, மருந்துகள் இருப்பு, உயிர்வளி இருப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.