மின்சாரத்தை வௌியிடும் விலாங்கு மீன்!

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

உலகின் அபூர்வமான விலங்கு வகைகளில் மின்சாரத்தை வௌியிடும் தன்மை கொண்ட விலாங்கு மீன்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. இதனைத் தழுவி ஹொலிவூட் திரைப்படம் எடுக்கும் அளவிற்கு அவை புகழ் பெற்றுள்ளன.

இந்தநிலையில், பிரேசில் ஆய்வாளரான கார்லோஸ் டேவிட் டி சண்டனா, அமேசானில் ‘போராக்’ என்று அறியப்படும் மின்சார விலாங்கு மீன் வகைகளை கண்டபிடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

இதற்காக நீரோடைகளிலும், ஆறுகளிலும் இறங்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

றப்பர் கையுறை மற்றும் காலணிகளை டேவிட் எப்போதும் அணிந்திருந்தாலும், சில சமயங்களில் மின்சார அதிர்வுகளுக்கு ஆளாவதை அவரால் தடுக்க முடியவில்லை.

ஆனால், டேவிட் அனுபவித்த இன்னல்களுக்கு தற்போது பயன்கிடைத்துள்ளது. இவரது ஐந்து வருட தேடலின் பயனாக மின்சார விலாங்கு மீனின் இரண்டு புதிய வகைகளை கண்டுபிடித்துள்ளார். அதில் ஒன்று 860 வோல்ட் (Volt) மின்சாரத்தை வெளியிடும் சக்தியுடையதாக உள்ளது.

இதே ரகத்தைச் சேர்ந்த மீன்களில் அதிக அளவிலான மின்சாரம் வெளியிடும் வரலாற்று பதிவை உருவாக்கிய மீனின் சாதனையை இந்த புதிய மீன் வகை முறியடித்துள்ளது.

இதற்கு முன்பாக 650 வோல்ட் மின்சாரம் வெளியிடும் மீன் கண்டபிடிக்கப்பட்டதே அதிகபட்ச  அளவாக பதிவாகியிருந்தது.இத்தகைய மின்சார விலாங்கு மீன் வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவலை வொஷிங்டனிலுள்ள இயற்கை வரலாற்று தேசிய அருங்காட்சிகத்தின் ஸ்மித்சோனியன் நிலையத்தின் விஞ்ஞானி ஒருவர் ‘நேச்சர் கம்யூனிகேஷன்’ என்ற சஞ்சிகையில் வெளியிட்டுள்ளார்.

‘போராக்’ என்று அறியப்படுகிற இந்த மின்சார ஈல் மீன் வகை தென் அமெரிக்காவில் காணப்படுகிறது. இதன் நீளம் 2.5 மீட்டர் வரை இருக்கலாம் என்பதுடன், குறைவான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சக்தியுடைய அத்தகைய மீன்களில் சுமார் 250 வகைகள் உள்ளன.

‘போராக்’ வகை விலாங்கு மீன்களே அதிக சக்தி வாய்ந்த மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்சார சக்தியை இரையை வேட்டையாடுவதற்கும், தற்காத்து கொள்ளவும் இவை பயன்படுத்தி கொள்கின்றன. இந்த மீனிலுள்ள மூன்று உறுப்புகளால் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆனால், மேலதிகமாக இரண்டு புதிய விலாங்கு மீன் வகைள் இருப்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. இவை வெளியிடும் மின்சக்தியை வைத்தும், மரபணு வரிசையை வைத்தும் இவற்றின் வேறுபாடு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

250 ஆண்டுகளுக்கு பின்னர், இரண்டு புதிய விலாங்கு மீன் வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமேசானில் ஏராளமாக பல்லுயிரின பெருக்கம் காணப்படுவதற்கு இது எடுத்துக்காட்டாகும் என்று டேவிட் சாண்டனா தெரிவித்துள்ளார்.

“அமேசானில் மட்டுமல்ல. இந்த கிரகத்தின் பல்லுயிரின பெருக்கும் பற்றிய சிறு பகுதியையே நாம் அறிந்து வைத்துள்ளோம். அவற்றின் உயிரியல் பற்றி மிகவும் குறைவாகவே நாம் அறிந்து வைத்துள்ளோம்,” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.