மியான்மரில் இருந்து அவலக் குரல்!

செவ்வாய் சனவரி 28, 2020

மியான்மரின் ரோக்கைன் மாகாணத்தில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை வன்முறையில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் இனப் படுகொலைக்கு ஆதாரமான விஷயங்களை அழித்துவிடாமல் காக்க வேண்டும் என்றும் மியான்மர் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மரில் இருந்து விரட்டி அடித்ததில் எந்த தப்பும் இல்லை என இதுவரை முழங்கிக் கொண்டிருந்த அரசுக்கு இது பலத்த அடியாக விழுந்துள்ளது. இஸ்லாமிய மாநாட்டு அமைப்பின் சார்பில் காம்பியா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த 14 நீதிபதிகள் அடங்கிய சர்வதேச நீதிமன்றம் ஒருமனதாக இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இதன் மூலம் கடந்த பல ஆண்டுகளாக சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வந்த பாலியல் பலாத்காரம், சித்ரவதை, படுகொலைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது நீதிமன்றம். ஆனால், சர்வதேச சட்டங்களின்படி மிகவும் மோசமான குற்றமாகக் கருதப்படும் இனப்படுகொலை மியான்மரில் நடந்ததா என்பதை நீதிமன்றம் நிரூபிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் விஷயத்தில் என்ன நடந்தது என்பதை உலக நாடுகள் சரிவர புரிந்து கொள்ளவில்லை என மியான்மர் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. சில நேரங்களில் மியான்மர் ராணுவ வீரர்கள் அத்துமீறி நடந்திருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் அரசு, மதரீதியாக மக்களை ஒருங்கிணைத்து அரசுக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டிவிடுவதைத் தடுக்கவே சில நடவடிக்கைகளை எடுத்தோம் எனக் கூறியிருக்கிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை உலக நாடுகளும் தொண்டு அமைப்புகளும் மனித உரிமை கழகம், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் போன்ற சர்வதேச அமைப்புகளும் ஏற்கவில்லை. கடந்த நவம்பர் மாதம் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான மியான்மர் நாட்டின் மக்கள் தலைவி ஆங் சான் சூகி, மியான்மர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவை தவறானவை என வாதாடினார். சமீபத்தில் பைனான்சியல் டைம்ஸ் இதழில் சூகி எழுதிய ஒரு கட்டுரையில், மியான்மர் அரசின் நடவடிக்கைகளை ஆதரித்ததோடு, உண்மையான விசாரணை மேற்கொள்ளாமல், ஆதாரமற்ற தகவல்களின் அடிப்படையில் மனித உரிமை அமைப்புகள் தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாக விமர்சனமும் செய்துள்ளார்.

மியான்மரில் இருந்து 7 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக விரட்டப்பட்டு வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்கள் மட்டுமன்றி, ரோக்கைன் மாகாணத்தில் இன்னமும் குடியுரிமை இல்லாமல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் நிலையும் மிகவும் மோசமாக இருப்பதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. மியான்மரில் இருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர்களை பாதுகாக்க அரசு சார்பில் உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதையும் மியான்மர் அரசு தாக்கல் செய்யவில்லை என்றும் சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் அப்துல்கவி அஹமது யூசுப் தெரிவித்துள்ளார். இனப்படுகொலையை தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். சர்வதேச நீதிமன்றத்துக்கு தங்கள் நாட்டு விஷயத்தில் தலையிட எந்த உரிமையும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய காம்பியாவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றும் மியான்மர் வாதாடியது. ஆனால் இந்த இரண்டு விஷயத்திலும் அது தோல்வியைத் தழுவியது.

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக வாதாடி வரும் அனைத்து தரப்பினருக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு உற்சாகத்தை அளித்துள்ளது. ஆனால் இது ஒரு ஆரம்பம்தான். இனப்படுகொலை நடந்ததா, இல்லையா என்பதில் தொடங்கி பல விஷயங்களை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். தொடர்ந்து இனப் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டே அதெல்லாம் உண்மையில்லை.. அகதிகள் முகாம்களில் இருந்து வரும் செய்திகள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை எனக் கூறி வரும் மியான்மர் அரசு, சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்தே ரோஹிங்கியா முஸ்லிம்களின் எதிர்காலம் இருக்கும். கடந்த 1990-களில் தென் கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) அமைப்பு மியான்மரையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டது. ரோஹிங்கியா பிரச்சினையில் இந்த அமைப்பு தலையிட்டால் நல்ல தீர்வைக் கொண்டு வர முடியும்.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்