மியான்மரில் ராணுவ ஆட்சி: இந்தியா, தாய்லாந்தில் தஞ்சமடையும் மியான்மர் மக்கள்

திங்கள் மார்ச் 29, 2021

 மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியதைத் முதல் அங்கு பல்வேறு போராட்டங்களும் அதனை ராணுவம் வன்முறைப் போக்கில் கையாளும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இந்த சூழலில், மியான்மர் ராணுவத்துக்கு அஞ்சி நூற்றுக்கணக்கான மியான்மரிகள் அகதிகளாக இந்தியாவிலும் தாயலாந்திலும் தஞ்மடைந்து வருகின்றனர். 

மியான்மரிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அதிகாரப்பூர்வ கணக்கின் அடிப்படையில், மியான்மரிலிருந்து இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக இருந்த நிலையில் தற்போது 733 ஆக உள்ளது.

தாய்லாந்தைப் பொறுத்தமட்டில், அகதிகளாக வரும் மியான்மரிகளின் திடீர் வருகையை கையாளும் முதல் விதமாக தாய்லாந்து ராணுவம் தற்காலிக முகாம்களை அமைத்துள்ளது. 

மியான்மரின் ஒரு புற எல்லையில் இந்தியாவும், மறு புற எல்லையில் தாய்லாந்தும் அமைந்திருக்கின்றது. அத்துடன் இந்த இரு எல்லைப்பகுதிகளிலும் உள்ள இனக்குழுக்களுக்கும் மியான்மர் மக்களுக்கும் இடையே இன ரீதியான உறவு உள்ளதால் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவிலும் தாய்லாந்திலும் தஞ்சமடைகின்றனர்.   

தாய்லாந்து எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் சுமார் 2,000 மியான்மர் அகதிகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. 

“இதில் பெரும்பாலோனார் இளையவர்களாக இருக்கின்றனர். சிலர் மருத்துவர்கள், மற்றும் சிலர் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகளாக உள்ளனர். அவர்களுடன் ராணுவம், காவல்துறையிலிருந்து வெளியேறியவர்களும் இங்கு தஞ்சமடைந்திருக்கின்றனர்,” என்கிறார் Karen தேசிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்கள் துறையின் தலைவர் Padoh Saw Taw Nee. 

ஐ.நா. வின் அகதிகள் சாசனத்தில் கையெழுத்திடாத நாடுகளாக இந்தியாவும் தாய்லாந்தும் உள்ளதால்,  மியான்மரிகள் கைது செய்யப்பட்டு நாடுகடத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது என்ற அச்சம் நிலவுகிறது.