மகாராஷ்டிரா கட்டிட விபத்து

திங்கள் செப்டம்பர் 21, 2020

மகாராஷ்டிர மாநிலத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு 10 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்டில்  அமைந்துள்ள 3 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததால், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காலையில் 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. சுமார் 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதன்பின்னர் மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து முழுவீச்சில் மீட்பு பணி நடைபெறுகிறது.