மகளிர் தினத்தையொட்டி சென்னையில் இருந்து 3 விமானங்களை இயக்கிய பெண்கள்!

திங்கள் மார்ச் 09, 2020

மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து டெல்லி, கோவை மற்றும் துபாய்க்கு ஏர்இந்தியா விமானங்களை பெண்களே இயக்கினார்கள்.

மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கும், உள்நாட்டு முனையத்தில் இருந்து டெல்லி மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கும் ஏர்இந்தியா விமானங்களை பெண்களே இயக்கினார்கள்.

அதன்படி சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 6 மணிக்கு டெல்லிக்கு சென்ற விமானத்தில் 123 பயணிகள் பயணம் செய்தனர். அந்த விமானத்தை பெண் விமானிகள் ஆர்த்தி டி குர்னி, பி.கே.பிரித்திகா, விமான பணிப்பெண்கள் மீனாட்சி குந்தல், அரோரா ரீனா, பீர் கீதா, ரஸ்மி சுரானா, பிரியங்கா ஹிரிகன் ஆகியோர் இயக்கினார்கள்.

 

டெல்லி சென்ற விமானத்தை இயக்கிய விமானிகள் மற்றும் பணிப்பெண்கள்


சென்னையில் இருந்து பகல் 2.20 மணிக்கு கோவைக்கு சென்ற விமானத்தில் 143 பயணிகள் பயணம் செய்தனர். அந்த விமானத்தை விமானிகள் சோனியா ராணி ஜெயின், விரிண்டா நாயர், விமான பணிப்பெண்கள் கரீ‌‌ஷ்மா, சரிதா, ஜீனா, மாயா, சீட்நா ஜெ ஆகியோர் இயக்கினார்கள்.

அந்த விமானம் மீண்டும் கோவையில் இருந்து 176 பயணிகளுடன் சென்னைக்கு அதே பெண்கள் குழுவினர் இயக்கினார்கள். முன்னதாக பெண்கள் தினத்தை முன்னிட்டு கோவைக்கு சென்ற விமானத்தை இயக்கிய பெண்கள் குழுவினருக்கு தென் மண்டல ஏர் இந்தியா மண்டல இயக்குனர் ஹேமலதா ரோஜா பூ கொடுத்து வாழ்த்தினார்.

அதேபோல் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு துபாய்க்கு சென்ற விமானத்தை விமானிகள் சோனியா ராணி ஜெயின், விரிண்டா நாயர், விமான பணிப்பெண்கள் விபோலி, சினேகா பகதி, சுவாதி முச்சாடியா, பிபர் பிரசன்னா, நாகமணி ஆகியோர் இயக்கினார்கள்.