மலேசியா: சட்டவிரோத குடியேறிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வீடுகளில் அதிரடி சோதனை

வியாழன் அக்டோபர் 10, 2019

மலேசியாவின் செலாங்கூர் மாநிலத்தில் சட்டவிரோதமாக வரும் வெளிநாட்டினரை தங்கவைத்திருந்த வீடுகளில் நடந்த சோதனையில் 26 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். 

புலாய் கேடம்(Pulau Ketam) என்ற பகுதியில் அதிகாலை 3 மணியளவில் ஐந்து வீடுகளில் நடந்த சோதனையிலேயே முறையான பயண ஆவணங்களின்றி மலேசியாவில் இருந்த குற்றத்திற்காக 26 வெளிநாட்டினரும் கைதாகியுள்ளனர். இவர்கள் அங்கு மீனவர்களாக, படகோட்டிகளாக, கூலிகளாக பணியாற்றி வந்திருக்கின்றனர். 

கைது செய்யப்பட்ட 26 பேரும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியுள்ள குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் கைரூல் டஸ்மீ தெளத், “கைதாகுவதிலிருந்து தப்புவதற்காக குடியேறிகள் எதையும் செய்யக்கூடிய ஆபத்தான இடம் இது,” என்று தெரிவித்திருக்கிறார். 

சோதனையின் போது அப்பகுதியில் உள்ள வீடுகளில் குடியேறிகள் தப்புவதற்கு என்று ரகசிய வழிகள் இருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். 

இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் Bukit Jalil குடிவரவு தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பின்னர் இவர்கள் அனைவரும் நாடுகடத்தப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.