மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 17 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப விருப்பம்!

புதன் நவம்பர் 20, 2019

மலேசியாவில் சட்டவிரோதமான முறையில் பணியாற்றிவரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த ஆண்டுக்குள் வெளியேற வேண்டும் என கெடுவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள 17 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப முன்வந்துள்ளனர். இந்தியர்கள் மட்டுமின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 102, 618 வெளிநாட்டினர் நாடு திரும்ப ஒப்புக்கொண்டுள்ளனர். 

சட்டவிரோதமாக மலேசியாவில் பணியாற்றும் வெளிநாட்டினர் வெளியேற அறிவுறுத்தும் ‘Back for good’ என்ற திட்டத்தின் மூலம் இவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றனர். இத்திட்டத்தின் கீழ் மலேசியாவிலிருந்து வெளியேறுபவர்கள் 700 மலேசிய ரிங்கட்டை (இந்திய மதிப்பில் சுமார் 11 ஆயிரம், இலங்கை மதிப்பில் 28 ஆயிரம்) அபராதமாக செலுத்த வேண்டும். கடந்த ஆகஸ்ட் 1 அன்று நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இத்திட்டம் டிசம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும் என்றாலும், இன்னொரு புறம் தேடுதல் வேட்டை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 14 வரை நாடுதிரும்ப ஒப்புக்கொண்ட வெளிநாட்டினர் எண்ணிக்கையில் அதிகபட்சமாக இந்தோனேசியர்கள் 37,048 பேர், வங்கதேசத்தவர்கள் 31,110 பேர், இந்தியர்கள் 17,107 பேர், பாகிஸ்தானியர்கள் 5,528 பேர் மற்றும் இன்னும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போல், சட்டவிரோத குடியேறிகளை கண்டறியும் விதமாக கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை  15,590 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டகதாக கூறுகிறார் குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் கைரூல் டஸ்மீ தெளத். இதில் சட்டவிரோத குடியேறிகளாக அறியப்பட்ட 181,473 பேரும் அவர்களுக்கு வேலை வழங்கிய 1,146 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 2014 முதல் ஆகஸ்ட் 2018 வரை நடைமுறையில் இருந்த மன்னிப்புத்திட்டத்தின் மூலம் 840,000 வெளிநாட்டினர்  மலேசியாவிலிருந்து சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.