மலேசியாவில் தேடுதல் வேட்டை: ஆவணங்களற்ற 32 புலம்பெயர்ந்தவர்கள் கைது

திங்கள் சனவரி 24, 2022

 மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள Putatan பகுதியில் மலேசிய குடிவரவுத்துறையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் ஆவணங்களற்ற 32 புலம்பெயர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆள் நடமாட்டமில்லாத இரண்டு கட்டிடங்களில் நடத்தப்பட்ட Operation Patuh Bersepadu எனும் தேடுதல் நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைது செய்யப்படுள்ளதாக சாபா குடிவரவுத்துறை இயக்குநர் சலிஹா ஹபிப் தெரிவித்திருக்கிறார். 

“முதலில் குடிவரவுத்துறையினரால் ஆவணங்கள் பரிசோதனைக்காக 124 பேர் சுற்றி வளைக்கப்பட்டனர். அதில் 32 பேரிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்பதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்,” என அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

இதில் கைது செய்யப்பட்ட 32 புலம்பெயர்ந்தவர்களில் 14 பேர் ஆண்கள், 11 பெண்கள், 7 பேர் குழந்தைகளாவர். 

“இவர்களை குடிவரவுத்துறையின் தடுப்பு மையத்திற்கு அனுப்புவதற்காக இவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை அறிய கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என குடிவரவுத்துறை இயக்குநர் சலிஹா ஹபிப் கூறியிருக்கிறார்.