மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மியான்மரிகள் 

வியாழன் பெப்ரவரி 25, 2021

மலேசியா எங்கும் உள்ள பல்வேறு குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டிருந்த மியான்மரைச் சேர்ந்த 1,086 சட்டவிரோத குடியேறிகள் மியான்மருக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் கைரூல் டஸ்மி தெரிவித்திருக்கிறார். 

அதே சமயம், இதில் நாடுகடத்தப்பட்டவர்களில் ரோஹிங்கியாக்கள், அல்லது பிற தஞ்சக்கோரிகையாளர்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மியான்மர் ராணுவம், கடற்படை, தேசிய பணிக்குழு, மியான்மர் தூதரகத்தின் ஒத்துழைப்புடன்

மியான்மரிகளை திருப்பும் அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் டஸ்மி தெரிவித்துள்ளார். 

மியான்மர் நாட்டு ராணுவம் மியான்மரிகளை திரும்ப அழைத்துக் கொள்வதற்காக கடற்படை கப்பல்களை அனுப்பியது தொடர்ந்து இவர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். இதில் நாடு திரும்பும் அனைவரும் சொந்த விருப்பத்தின் பேரிலேயே நாடு திரும்புவதாக மலேசிய குடிவரவுத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக, ஐ.நா. உள்ளிட்ட மனித உரிமை தரப்புகள் இந்நாடுகடத்தலில் ரோஹிங்கியா அகதிகளும் பிற மியான்மர் நாட்டு தஞ்சக்கோரிக்கையாளர்களும் நாடுகடத்தப்படக்கூடும் என அச்சம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.