மலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக்!

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

மலேசியாவில் அடைக்கலம் அடைந்துள்ள இஸ்லாமிய மதப்பிரச்சாரகர் ஜாகிர் நாயக் அந்நாட்டு அரசியல் விவகாரத்தில் தலையிடுவது குறித்து பிரதமர் மஹதிர் முஹம்மது அதிருப்தி தெரிவித்துள்ளார்.

வங்காளதேச தலைநகரான டாக்காவில் வெளிநாட்டினர் தங்கியிருந்த ஓட்டலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். மும்பையை சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்காளதேச அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. 

மேலும், ஜாகிர் நாயக்கின் பேச்சு அடங்கிய வீடியோ காட்சிகளை மத்திய மற்றும் மகாராஷ்டிரா மாநில புலனாய்வு போலீசார் தீவிரமாக ஆராய்ந்துவந்த நிலையில், ஜாகிர் நாயக்கை கைது செய்ய வேண்டும் என்றும் சிவசேனா கட்சி வலியுறுத்தியது.

நான் எந்த வடிவிலும் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஆதரித்தது இல்லை. இது தொடர்பாக தன்னிடம் விளக்கம் கேட்டு இந்திய அதிகாரிகள் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை என்று ஜாகிர் நாயக் விளக்கம் அளித்திருந்தார்.

இஸ்லாமிய மதப் பிரச்சாரம் செய்வதற்காக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யச் சென்ற ஜாகிர் நாயக், இந்தியாவுக்கு திரும்பி வராமல் வெளிநாட்டில் தங்கினார்.

இதற்கிடையில், ஜாகிர் நாயக் மற்றும் அவரது ‘பீஸ் பவுண்டேஷன்’ அமைப்பு, பீஸ் தொலைக்காட்சி மற்றும் இந்தியாவில் உள்ள அவருக்கு சொந்தமான சொத்துக்களையும் மத்திய அரசு முடக்கியது.

இந்தியாவுக்கு வந்தால் கைது செய்யப்படலாம் என அஞ்சிய ஜாகிர் நாயக் 2017-ம் ஆண்டு மலேசியாவில் தஞ்சம் அடைந்தார். அவருக்கு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆட்சிக் காலத்தில் நிரந்தர வசிப்பிட குடியுரிமையும் அளிக்கப்பட்டது.

இந்தியாவில் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு சொந்தமான 10 இடங்களிலும் சோதனை நடைபெற்று, அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. கருப்பு பண பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது.

இதற்கிடையில், மலேசியாவில் தங்கியுள்ள ஜாகிர் நாயக் சமீபத்தில் அந்நாட்டு அரசுக்கு எதிரான வகையிலும் மதத்துவேஷத்தை தூண்டும் முறையிலும் பேசி இருந்தார். 

 

 பிரதமர் மஹதிர் முஹம்மது, பிரதமர் மோடி

 

'இந்தியாவில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு கிடைப்பதைவிட மலேசியாவில் வாழும் இந்துக்களுக்கு 100 மடங்கு அதிகமான உரிமைகள் அளிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் மலேசிய பிரதமரை ஆதரிக்காமல் இந்திய பிரதமரைத்தான் ஆதரிக்கின்றனர்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் மலேசியாவில் இருக்கும் சீனர்கள் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தையும் அவர் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து, மலேசியாவின் எந்த மாநிலத்திலும் அவர் மதப்பிரச்சாரம் செய்யக் கூடாது என போலீசார் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், ஜாகிர் நாயக் விவகாரம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த மலேசியா பிரதமர் மஹதிர் முஹம்மது, ‘ஜாகிர் நாயக் இந்த நாட்டில் பிறந்த குடிமகனல்ல; கடந்த ஆட்சிக்காலத்தில் அவருக்கு வசிப்பிட குடியுரிமை அளிக்கப்பட்டது. இப்படி குடியுரிமை பெற்றவர்கள் இந்த நாட்டின் ஆட்சிமுறை மற்றும் அரசியல் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்ற விதிமுறையை அவர் மீறிவிட்டதால் அவர் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரஷியாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்தித்தபோது ஜாகிர் நாயக்கை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைக்கவில்லை. அவரை ஏற்றுக்கொள்ள நிறைய நாடுகள் தயாராக இல்லை.

தற்போது புர்ட்டஜெயா நகரில் வாழும் அவரை எங்கே அனுப்புவது? என்று ஆலோசித்து வருகிறோம். ஆனால், தற்போதைய சூழலில் ஜாகிர் நாயக்கை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை’ என தெரிவித்துள்ளார்.