மனைவியைத் துண்டு துண்டாக வெட்டி வீசியது ஏன்?

வியாழன் பெப்ரவரி 07, 2019

பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட கை, கால்களை வைத்து அந்தப் பெண்ணை காவல் துறை  அடையாளம் கண்டுள்ளனர். மனைவியை துண்டு, துண்டாக வெட்டியது ஏன் என்று சினிமா இயக்குநர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 21-ம் திகதி இரண்டு கால்கள், ஒரு கை ஆகியவை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்ததும் பள்ளிக்கரணை காவல் துறை அதிகாரி ஆல்பின்ராஜ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கை, கால்களை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

துண்டிக்கப்பட்ட கை, கால்கள் ஒரு பெண்ணின் உடலிருந்து வெட்டி எடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தார். கையில் வளையலும் காலில் மெட்டியும் இருந்தது. மேலும் அதில் சிவன், பார்வதி படம் பச்சை குத்தப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பெண் யார் என்பதைக் கண்டறிய துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் கெங்கைராஜ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படைகாவல் துறை  தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் மாயமான பெண்கள் குறித்த விவரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். 

அதே நேரத்தில் கோடம்பாக்கம் பகுதியிலிருந்து வந்த குப்பையில்தான் உடல் பாகங்கள் இருந்ததால் அந்தப்பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் அருகில் உள்ள சிசிடிவி கமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், கைரேகையில் உள்ள பதிவு மூலம் ஆதார் விவரங்களை சேகரிக்கவும் முயற்சி நடந்தன. இருப்பினும் இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த வழக்கில் துப்பு துலங்கப்படாமல் இருந்தது. 

 

 சினிமா இயக்குநரால் கொலை செய்யப்பட்ட சந்தியா

இந்தநிலையில் தனிப்படைகாவல் துறைக்கு ஒரு முக்கிய தகவல் கிடைத்தது. துண்டிக்கப்பட்ட கை, கால்கள் சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த பெண் என்று தெரியவந்தது. மேலும் அவரின் சொந்த ஊர் நாகர்கோவில் என்றும் தெரியவந்தது. இதனால் அந்தத் தகவலின் அடிப்படையில் காவல் துறையினர்  விசாரணை நடத்தத் தொடங்கினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து காவல் துறை கூறுகையில், ``குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட கை, கால்களுக்குரிய பெண்ணின் பெயர் சந்தியா (38), அவரின் கணவர் பெயர் பாலகிருஷ்ணன். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாலகிருஷ்ணன், குறும்படம் மற்றும் சினிமாவில் இயக்குநராக உள்ளார். சந்தியாவும் சினிமாவில் நடிக்க முயற்சிகள் செய்துவந்துள்ளார்.  இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் மனைவியைக் கொலை செய்துள்ளார். பிறகு அவரின் உடலில் உள்ள பாகங்களைக் கத்தியால் வெட்டியுள்ளார். கை, இரண்டு கால்களை கே.கே. நகர் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் 25 கிலோ அரிசி பையில் வைத்து வீசியுள்ளார். மீதமுள்ள உடல்பாகங்களை ஜாபர்கான்பேட்டை அருகில் உள்ள ஆற்றில் வீசியதாக பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சந்தியாவின் சடலத்தை கூவம் ஆற்றில் தேடிவருகிறோம். 

 சினிமா இயக்குநரால் கொலை செய்யப்பட்ட சந்தியா

இதற்கிடையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து கேட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாக பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திவருகிறோம். அவர் கூறிய தகவல்களை வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளோம். மனைவியைக் கொலை செய்து அவரின் உடல்பாகங்களைக் கூறுபோட்டு வீசிய பாலகிருஷ்ணனை கைது செய்துள்ளோம்" என்றனர். 

இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``குப்பைக் கிடங்கிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கை, கால்களை வைத்து ஒருவரை அடையாளம் காண்பது சுலபமானதல்ல. ஆதார் மூலம் தகவல்களைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. இருப்பினும் 
எங்களின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிந்தன. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்குச் சென்று தனிப்படையினர் விசாரித்தனர். இந்தச்சமயத்தில்தான் எங்களுக்கு சந்தியா மாயமான தகவல் கிடைத்தது. சந்தியாவின் உறவினர்கள் கொடுத்த தகவல்களும் குப்பைக் கிடங்கில் கிடந்த கை, கால்களில் இருந்த தடயங்களும் ஒத்துப்போனது.

இதனால் கை, கால்களுக்குச் சொந்தமானவர் சந்தியா என்பதை உறுதி செய்தோம். அவரை யார் கொலை செய்தார்கள் என்று விசாரணை நடத்தினோம். முதலில் எங்களின் சந்தேகப் பார்வை பாலகிருஷ்ணன் மீது விழுந்தது. அவருக்கே தெரியாமல் அவரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தோம். சந்தியா குறித்து அவரிடம் விசாரித்தபோது முதலில் அவரும் எங்களுடன் மனைவியைத் தேடுவதைப் போல நடித்தார். ஆனால், எங்களின் கிடுக்குப்பிடி விசாரணையில் அவர் சிக்கிக் கொண்டார். சந்தியாவின் நடவடிக்கைகள் பாலகிருஷ்ணனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் செல்பாடுகள் குறித்து பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால்தான் சந்தியாவைக் கொலை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்தபிறகு அவரின் உடல்பாகங்களை கூறு போட்டதாக எங்களிடம் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்" என்றார்.

பாலகிருஷ்ணனின் சொந்த ஊர் தூத்துக்குடி டூவிபுரம். பாட்டாளி மக்கள் கட்சியில் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார். அதன்பிறகுதான் சினிமா ஆசையில் சென்னை வந்துள்ளார். அவர் `காதல் இலவசம்' என்ற படத்தை பல ஆண்டுகளாக எடுத்தார். அந்தப்படத்தில் உள்ள காட்சிகள் அனைத்தும் தூத்துக்குடியில் எடுக்கப்பட்டவை. மேலும், தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சினிமாவில் பெரிய ஆளாக சென்னை சென்றவர் இப்படி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் என்கின்றனர் அவருக்கு வேண்டப்பட்டவர்கள்.

மனைவியைக் கொன்று அவரின் உடல்பாகங்களை கூறுபோட்டு வீசிய கொடூர கணவன் பாலகிருஷ்ணன், `காதல் இலவசம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். அவரிடம் தொடர்ந்து காவல் துறையினர்   விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.