மனச்சோர்வு, கவலை, விரக்தி நிலையில் ஆஸ்திரேலிய தீவின் தடுப்பு முகாம்வாசிகள்

சனி ஓகஸ்ட் 29, 2020

ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு வெளியே உள்ள கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருந்த நிலையில், 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவிலிருந்து அம்முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தில் உள்ள Yongah Hill தடுப்பு மையத்திலிருந்து கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்ட Reilly, கொரோனா சூழல் காரணமாக தடுப்பில் உள்ளவர்களை யாரும் பார்வையிட அனுமதிக்காத நிலையில் வீடியோ அழைப்பின் வழியே கூட பேச முடியாத நிலை தங்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

இம்முகாமில் முறையான இணைய வசதியோ அல்லது முறையான தொலைபேசி வசதியோ இல்லை எனக் கூறப்படுகின்றது. அத்துடன் முகாம்வாசிகள் பலர் மனச்சோர்வு, கவலை, விரக்தியுடன் காணப்படுவதாக அண்மையில் கிறிஸ்துமஸ் தீவு முகாமிற்கு மாற்றப்பட்ட Les Reilly தெரிவித்துள்ளார்.  

“கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நல்ல இணைய வசதி இல்லாமல் இருப்பது குறித்து மிகுந்த கவலையடைகிறோம். இணைய வசதியின் தரமும் வெளியுலகுடன் தொடர்பு கொள்வதற்கான வசதியும் அங்கு மிகவும் மோசமாக உள்ளது,” என தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்தின் தலைமை வழக்கறிஞர் Carolyn Graydon தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் தீவில் மருத்துவ வசதியையும் குறைவாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 55 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவில் சுமார் 250 குடியேற்ற கைதிகள் கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய எல்லைப்படை ஆணையர் மைக்கேல் அவுட்ரம் தெரிவித்திருந்தார்.     விசா ரத்து செய்யப்பட்டவர்கள், அல்லது குணநலன் அடிப்படையில் விசா மறுக்கப்பட்டவர்கள் கிறிஸ்துமஸ் தீவு தடுப்புக்கு அனுப்பப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து 1500 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் அமைந்திருக்கும் இத்தீவில் உள்ள முகாம் இயக்கப்படுவதன் மூலம் ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள இட நெருக்கடி பிரச்னையை சமாளிக்க இயலும் என ஆஸ்திரேலிய எல்லைப்படை கருதுகின்றது.