மனித நேய ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்களை அச்சுறுத்திய சிங்கள புலனாய்வாளர்கள்!

திங்கள் செப்டம்பர் 06, 2021

 சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி பிரித்தானியாவில் இருந்து  02.09.2021  ஆரம்பிக்கப்பட்ட  ஈருருளிப்பயணம் ஐ.நா வை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

இன்று  ஈருருளிப்பயணம் 4ம் நாளாக   நெதர்லாந்தில் உள்ள பிரேடா மாநகரசபை முன்றலில் இருந்து பெல்சியம் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில்  பிரேடா நகர எல்லையில் வைத்து சிங்கள புலனாய்வாளர்களால் வழிமறித்து அச்சுறுத்தல் விடுத்து எச்சரிக்கை செய்தது  மட்டுமன்றி அவ் அறவழிப் போராட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த  மனித நேயச்செயற்பாட்டாளர்களின் ஈருருளிகளையும் சேதப்படுத்தி உள்ளனர்.

2009 ஆண்டில் எமது இனம் முள்ளிவாய்காலில் சந்தித்த இழப்பின் பின்னர், தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தின் நகர்வுத்திறன் புலம்பெயர் தமிழ் மக்களிடமும், உலகத் தமிழ் மக்களிடமுமே செறிந்துள்ளது. அதனை நன்கு புரிந்துகொண்ட சிங்கள அரசு  தற்போது  அறவழிப் போராட்டத்தில் ஈடுப்படும்  மனித நேயச்செயற்பாட்டாளர்களுக்கு  அச்சுறுத்தல் விடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது .