மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது!!

புதன் ஜூன் 29, 2022

பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார சர்வதேச அபிவிருத்தி அமைச்சிற்கு, இலங்கை மனித உரிமை முன்னுரிமை நாடுகளில் ஒன்று என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் அமைச்சர் விக்கிபோர்ட், இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்தும் முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஆதரவு கிடைக்காது என மதிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் மோர்கன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்
பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார சர்வதேச அபிவிருத்தி இணையமைச்சர் விக்கிபோர்ட் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் சமூகத்திற்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்துவதற்கு
என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் மோர்கன் கேள்வி எழுப்பினார்.

சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தும் நடவடிக்கைகளிற்கு பாதுகாப்பு சபை ஆதரவளிக்காவிட்டால் அல்லது வீட்டோ செய்தால்
அதன் காரணமாக பொறுப்புக்கூறச்செய்யும் நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார சர்வதேச அபிவிருத்தி இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.