மனித வாழ்வில் இத்தனை பேரவலம்

புதன் மார்ச் 25, 2020

1978 இல் கிழக்கில் புயலடித்தபோது வாழைமரங்கள் முறிந்து கிடந்த காட்சியும் புயற்காற்று பரப்பி விட்ட மாங்காய்களும்தான் கண்முன்னே தோன்றி மறைகின்றன.

பின்னர் போர்மேகங்கள் எம்மைச் சூழ்ந்து கொண்டன. இரத்தமும் கண்ணீருமாய் நொறுங்குண்ட இதயத்துடன், மரணங்களைக் கடந்துதான் வாழ வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

இளமைக் காலம் முழுவதுமே போருள் புதையுண்டு போனது. பதின் பருவமும் இருபதுகளும் போர்க் காட்சிகளைக் கண்டு பழகியவாறே நகர்ந்தன. போரின் தலைமுறையாய் நம் ஒவ்வொருவரின் வாழ்வையும் வரலாறு எழுதி விட்டது.

இடையில் ஜே.வீ.பி கிளர்ச்சி அனுபவங்களும் மங்கவாய் ஓரளவு கிடைக்கவே செய்தன.

2004 இல் ஆழிப் பேரலையில் அகப்பட்ட ஆயிரக் கணக்கான உடல்களைக் கூட்டி அள்ளினோம். அதுவரை வசீகரமாய்த் தெரிந்த- நம்மை ஈர்த்த கடல், முதல் முறையாய்ப் பயங்காட்டியது. முப்பதுகள் போரின் இன்னொரு பரிமாணத்துள் நம்மை இழுத்து விட்டது. இறுதிப் போரின் பேரவலங்களுள் மனிதம் துடிக்கத் துடிக்க சிதைந்தழிந்தது.
எதுவும் செய்ய முடியாமல் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தோம்.

போருக்குப் பிந்திய இலங்கை பற்றிய கனவுகளைக் கலைத்துப் போட்டன. இனவாதத் தீ இன்னொரு பரிமாணத்தில் பற்றியெரிந்தது. 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் முட்டாள் கொலைஞர்களும் அவர்களைப் பின்னின்று இயக்கியோரும், மீள முடியாப் பேரவலத்துள் இந்த அழகிய, சின்னஞ் சிறிய தீவின் எதிர்கால நம்பிக்கைகளைத் தகர்த்து விட்டனர்.

இப்போது 2020 இல் கொவிட்-19 வைரஸால் நாம் முடங்கிப் போயிருக்கிறோம். உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. இந்த வாழ்க்கையோட்டத்துக்குள்தான் எத்தனை காட்சிகள்! எத்தனை காயங்கள்!. மனிதர்களது கரங்கள் தேடிய அனர்த்தங்களுக்கும் இயற்கை அனர்த்தங்களுக்கும் இடையே உழல்கிறது இந்த வாழ்க்கை.

பன்மைத்துவத்தைக் கொண்டாடுவோம். மனிதநேயத்தாலும், பகைமறப்பாலும், இன உறவாலும், பரஸ்பர புரிந்துணர்வாலும் மீள எழுவோம். நமது நம்பிக்கைகளைப் புதுப்பிப்போம். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

கொரோனா வைரஸிற்கு பிந்திய உலகம் வேறொன்றாய்த்தான் இருக்கப் போகிறது. உலக நாடுகளின் தகவல்களை அவதானிக்கும் போது, சிதறிக்கிடைக்கும் பிணங்களைக் கூட புதைப்பதற்கு மனிதர்கள் இல்லை என்றநிலை தோன்றியுள்ளது. ஒருவரை ஒருவர் பார்த்து ஒதுங்கும் நேரமாகவுள்ளது.