"மனிதச் செயல்பாட்டின் ஒவ்வொரு தளத்திலும் நாங்கள் ஏன் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம்?"

செவ்வாய் சனவரி 21, 2020

மனிதச் செயல்பாட்டின் ஒவ்வொரு தளத்திலும் நாங்கள் ஏன் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம்? நாங்கள் மட்டும் ஏன் தனிமைப்படுத்தப்பட்டு ஊருக்கு வெளியே அசுத்தமான, பாழடைந்த சுற்றுப்புறங்களில் உள்ள குடிசைகளில் வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறோம்?

'வழித்தடம்' முகநூல் இதழுக்காக, சரத்குமார் லிம்பாலேயின் சிறுகதையொன்றிலிருந்து...

எனக்குக் கல்வியறிவு கிடைக்காமல் இருந்திருந்தால் கூட நன்றாயிருக்குமே என்று நான் சில நேரங்களில் நினைப்பேன். ஏதோ ஒரு உயர்சாதிக்காரனுக்குக் கீழே ஏதோவொரு புழுக்கை வேலை பார்த்துக் கொண்டு, குவியல் குவியலாய் என்மீது சுமத்தப்படுகிற அநியாயங்களை எல்லாம் அமைதியாகத் தாங்கிக் கொண்டிருந்திருப்பேன். கல்வி ஒருவனுடைய சுயமரியாதை உணர்வைக் கிளர்த்தி விடுகிறது.

நாங்கள் தண்ணீர் மொள்ள நதிக்கரையின் அருகே ஒரு தனியிடம் தரப்படுகிறது. சாவிலும் கூட எங்களது சக தேசத்தவர்களான உயர்சாதிக்காரர்களை நாங்கள் தீட்டாக்கி அசுத்தமாக்கி விடுவோம் என்கிற அச்சத்தாலோ என்னவோ, இடுகாடு கூட எங்களுக்குத் தனியாக ஒதுக்கித் தரப்படுகிறது.

ஒரு தலித் என்பவன் எப்போதும் அடிமட்டத்துக் கடைசிப் படியில் இருக்கும் விதமாகவே சமூகம் விதித்திருக்கிறது. அதை மரபான கட்டுப்பாடாக அறிவித்துக் கடைப்பிடித்து வருகிறது. ஒரு கோவிலில் அவன் கடைசி படிக்கருகில் நின்று கொள்வதோடு திருப்தி அடைய வேண்டும். பள்ளிக்கூடத்தில் வகுப்பறைக்கு வெளியே படிகளில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

உணவு விடுதிக்கு முன்வாசல் வழியாக நுழையக் கூடாது. அவருக்கு அவ்விடுதியில் இருக்கை மட்டுமல்லாது அந்த சூழலே மறுக்கப்படுகிறது. ஆனால், உணவுப் பண்டங்களுக்கு மற்றவர்களுக்கு உள்ள அதே விலையைத்தான் அவர் கொடுக்க வேண்டும்.

ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒருவனின் வீட்டுக்குப் போனால் இங்கேயும் எங்களது இடம் படிகளுக்கு அருகில்தான். என்னதான் பெரிய அபாயம் நேர்ந்தாலும் அவ்வீட்டுக்குள் நாங்கள் நுழையக் கூடாது.

சமூகத்தின் கைகளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படியிலும், மனித இருப்பு சார்ந்த ஒவ்வொரு கட்டத்திலும் இந்த அவமானங்களையும், அநீதிகளையும் அனுபவிப்பது என்பது எனது சுயமரியாதை உணர்வைக் கிளறிவிட்டுவிடும்.

ஒரு சின்ன மாற்றத்தைக் கூடச் செய்ய முடியாத அளவுக்குச் சக்தியற்றவனாகவும் நிராதரவானவனாகவும் நான் இருப்பதால் கோபத்தில் நான் கொந்தளித்தாலும் அதை எனக்குள்ளாகவே எரித்துக் கொள்ள வேண்டியதுதான்.

அதேநேரம், எங்களது அபிலாஷைகளையும், நீதிக்கான எனது போராட்டங்களையும் மட்டுமல்ல; கௌரவமான வாழ்க்கையையும் எங்களிடமிருந்து பிரித்தெடுக்க சமூகம் தனது சுருக்குக் கயிற்றினை இன்னும் இறுக்கமாக இழுப்பதற்கு கூடுதல் கண்காணிப்போடு இருக்கிறது