மங்களூரு கடற்பகுதியில் ஆராய்ச்சிக் கப்பலில் தீ விபத்து!

சனி மார்ச் 16, 2019

மங்களூரு கடற்பகுதியில் தீப்பிடித்த ஆராய்ச்சிக் கப்பலில் இருந்த 16 விஞ்ஞானிகள் உள்பட 46 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

கர்நாடக மாநிலம் மங்களூர் கடற்பகுதியில் நேற்று இரவு சாகர் சம்படா என்ற ஆராய்ச்சிக் கப்பல் சென்றுகொண்டிருந்தது. அதில் கப்பல் ஊழியர்கள் 30 பேர், 16 விஞ்ஞானிகள் பயணம் செய்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

கடலோர காவல் படையின் விக்ரம், ஷூர் ஆகிய கப்பல்களில் வீரர்கள் விரைந்து சென்று, சாகர் சம்படா கப்பலில் பிடித்த தீயை அணைத்தனர். கப்பலில் பயணம் செய்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதன்பின்னர் சாகர் சம்படா கப்பலை மங்களூரு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.