மண்டோதரியை சீதை என்று நினைத்த அனுமன்

திங்கள் நவம்பர் 04, 2019

இலங்கை வேந்தன் இராவணனால் கடத்தப்பட்ட சீதையைக் கண்டறிய அனுமன் இலங்கைக்கு வருகின்றான்.

முன் பின் சீதையைத் தெரியாத அனுமனுக்கு சீதையின் அங்க அடையாளங்களை இராமன் கூறிவைத்திருந்தான்.

அந்த குறிப்புகளோடு இலங்கைக்கு வருகின்ற அனுமன், வாயுபுத்திரன்.மிகச் சிறந்த அறிவாளி. பலசாலி.பிரமச்சாரி.
சீதாப்பிராட்டியைத் தேடி வருகின்றபோது, இராவணேஸ்வரனின் மனைவி மண்டோதரியைக் காணுகின்றான்.

மண்டோதரி இலங்கை வேந்தனின் பட்டத்துராணி என்பதால் அதற்குரிய இலட் சணங்களோடு அவள் விளங்குகிறாள்.

மண்டோதரியைக் கண்ட அனுமன் அவளே சீதை என்று நினைத்து சிந்தை குலைகிறான்.

சீதை மீது இராமன் நிறைந்த அன்பும் நம்பிக்கையும் வைத்திருக்க, இங்கு சீதையோ பட் டத்து ராணியாக இருக்கிறாளே இஃதென்ன அநியாயம் என்பதே அனுமனின் சிந்தை குலையக் காரணம்.

என்ன செய்வது அறிவாற்றல்மிக்க அனுமன்கூட அறிவுத்தளர்ச்சிக்கு உட்படுகின்ற நிலைமை ஏற்படுகிறது.

இதற்குக் காரணம் அனுமன் இராம பக்தனேயன்றி சீதையின் அடியவன் அன்று. எனவே அனுமனின் சிந்தையெல்லாம் இராமனின் பக்கமாக இருந்ததனால், மண்டோதரியைச் சீதையென்று நினைக்கின்ற பேதமை அவனிடம் ஏற்படுகிறது.

இங்கு அறிவாற்றல் மிகுந்த அனுமனே மண்டோதரியைச் சீதை என நினைக்கிறானெனில்,

ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டதைக் கண்டு ஆகா எங்கள் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டுவிட்டன.

இந்த ஒற்றுமைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி சம்மதம் தெரிவித்தது பெரிய விடயம்.

இதற்கு மேலாக, 13 அம்சக்கோரிக்கைகள். அப்பாடா எவ்வளவு அற்புதம். தமிழர்களுக்கு இனியன்னகுறை.

ஐந்து தமிழ்க் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தியவர்கள் என்றும் போற்றுதற்குரியவர்கள் என்று தமிழ் மக்கள் நினைத்தனர். நம்பினர்.ஆனால் இதெல்லாம் மண்டோதரியை சீதையாகப் பார்த்த சிந்தைக் குலைவேயன்றி வேறில்லை.

உண்மையான சீதை அசோகவனத்தில் இருக்கிறார். அவரை இனித்தான் வாயுபுத்திரன் காணப்போகிறான்.
ஆக, இப்போது நடந்தவை மாரிசனின் மாயமான் விளையாட்டும் கடத்தல் நிகழ்வுமே.

இதில் மண்டோதரியைச் சீதை என நினைத்த அனுமன் போல,தமிழ்ப் பற்றுக் கொண்டவர்கள்; ஐந்து தமிழ்க் கட்சிகளைக் கொண்டு மேடை ஏற்றிய நாடகத்தை நிஜம் என்று நம்பினர்.

இதில் ஐந்து தமிழ்க் கட்சிகளிலும் ஒரு சில கட்சிகள் ஒற்றுமையை  ஒற்றுமைப்படுத்தலை நிஜம் என்று நம்பியதையும் இங்கு  கூறித் தானாக வேண்டும்.நன்றி-வலம்புரி