மனுஸ்தீவில் தீக்குளித்த சூடான் நாட்டு அகதி

வியாழன் ஜூன் 13, 2019

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயன்று மனுஸ்தீவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சூடான் நாட்டு அகதி தீக்குளித்த சம்பவம் முகாம்வாசிகளிடையே பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய பெடரல் தேர்தலில் மீண்டும் லிபரல் கூட்டணி அரசே ஆட்சி அமைத்தது முதல், அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றன.

இந்த தீக்குளிப்பு முயற்சி உடனடியாக தடுக்கப்பட்ட போதிலும், மற்ற அகதிகள் தற்கொலைக்க முயற்சிப்பதற்கான  ஆபத்தான நிலை இருப்பதாக மனுஸ்தீவில் இருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றது.

“மனுஸ்தீவில் உள்ள அகதிகள் கடுமையான மன அழுத்தம் மற்றும் மனநலமற்ற நிலையில் இருக்கிறார்கள். உடல் மற்றும் மனநல நிலைமை நாளுக்குள் நாள் மோசமடைந்து வருகிறது,” என இலங்கை அகதியான சமிந்தன் கணபதி தெரிவித்திருக்கிறார்.

தேர்தலுக்கு பின், மனுஸ்தீவில் உள்ள 50 க்கும் மேற்பட்ட அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் தற்கொலை அல்லது உடல்ரீதியாக வருத்திக்கொள்ள முயன்றிருக்கின்றனர் என மற்றொரு அகதியான பென்ஹம் சட்டாஹ் குறிப்பிட்டிருக்கிறார்.

தீக்குளித்த சூடானிய அகதிக்கு முதலுதவி வழங்கப்பட்டு தீக்காயத்திற்கான சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மோசமான நிலையில் கூட அவருக்கான சரியான அடுத்தக்கட்ட மருத்துவம் வழங்கப்படாமல்

தனியார் பாதுகாப்பு அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாக அகதி ஒருவர் தெரிவித்திருக்கின்றார். மத நம்பிக்கை கொண்ட அகதிகள் கடவுள் நிராகரிக்கும் அளவுக்கு மன அழுத்தம் கூடியிருப்பதாக சட்டாஹ் சுட்டிக்காட்டுகிறார்.