மோசமான சாலைகளால் திருமணம் நடக்கவில்லை! பாஜக முதல்வருக்கு ஆசிரியை கடிதம்-

வெள்ளி செப்டம்பர் 17, 2021

கர்நாடகா- மோசமான சாலைகளால் தங்கள் கிராமத்தில் உள்ள பலருக்கும் திருமணம் நடக்கவில்லை என்று ஆசிரியை ஒருவர், கர்நாடகா முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் தாவன்கரே (Davangere) மாவட்டத்தில் இருக்கிறது ஹெச்.ராம்புரா கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை, 26 வயது பிந்து. இவர் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கின்ற பாஜக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு எழுதியுள்ள கடிதம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்தக் கடிதத்தில் அவர், எங்கள் பகுதியில் சாலைகள் மோசமாக இருக்கின்றன. அது இன்னும் பின் தங்கிய நிலையில்தான் இருக்கிறது. எங்கள் ஊரில் பலருக்குத் திருமணமாகவில்லை. 

அதற்கு மோசமான சாலைகள்தான் காரணம். இந்த ஊரில் திருமணம் செய்தால் குழந்தைகள் வெளியூர் சென்று கல்விபயில சரியான சாலைகள் இல்லை என்று வெளியூர்க்காரர்கள் நினைக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அதிகாரி கூறுகையில், நாங்கள் இந்த சாலையை மேம்படுத்த, ஏற்கனவே 1-2 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம். ஆனால் அது போதுமானதாக இல்லை. எங்களுக்கு ரூ.50 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் தேவை. இதற்காக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம் என்றார்.