மோடி மீண்டும் வரக்கூடாது என்பது தமிழர்களின் உணர்வு!

ஞாயிறு பெப்ரவரி 10, 2019

நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களின் உணர்வு என்னவென்றால், மோடி மீண்டும் வரக்கூடாது என்பதுதான். அதில் எல்லோரும் தெளிவாக இருக்கிறோம் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். 

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடக்கன்குளத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் 40 வருடமாக சினிமா தொழிலில் இருந்து வருகிறேன். அப்போது நாணயம் இருந்தது. தற்போது தமிழ் ராக்கர்ஸ் படத்தை போட்டி போட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் தான் சினிமா அழிந்து வருகிறது. சமீப காலமாக சினிமாவில் வியாபாரிகள் வந்து விட்டனர்.

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து முயற்சித்தால் தான் தமிழ் ராக்கர்சை ஒழித்து, சினிமாவை காப்பாற்ற முடியும். யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று கணிக்க முடியவில்லை. யார் வந்தால் நன்றாக இருக்கும் என்றுகூட புரிய முடியவில்லை. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. அதற்குள் மக்கள் தெளிவாகி விடுவார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களின் உணர்வு என்னவென்றால், மோடி மீண்டும் வரக்கூடாது என்பதுதான். அதில் எல்லோரும் தெளிவாக இருக்கிறோம். தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் எல்லோரும் மிகவும் பயந்து கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கு ஆதரவு என்று கேட்கிறீர்கள். அதை விஜய்யிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

கூலித்தொழிலாளி, டாக்டர், வக்கீல் என யார் வேண்டுமானும் அரசியலுக்கு வரலாம். இவர்தான் அரசியலுக்கு வர வேண்டும் என பட்டயம் தீட்டி கொடுக்கவில்லை. சமூகத்துக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். சினிமா நடிகரால் முடியும் என்றால் வரட்டும்.

வாக்காளர் எந்திரத்தில் ஒப்புகைச்சீட்டு என்பது நல்ல வி‌ஷயம். இதற்கு முன்பு எங்கு ஓட்டு போட்டோம். யாருக்கு ஓட்டு போட்டோம் என்று வாக்காளர்களுக்கு தெரியாமல் இருந்தது. தற்போது வாக்காளர் எந்திரத்தில் ஒப்புகைச்சீட்டு என்பது வரவேற்கத்தக்கது. வாக்காளர்களுக்கும் திருப்திகரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.