மறைமுகமான பேச்சுக்கள் எதுவும் வேண்டாம்

ஞாயிறு செப்டம்பர் 29, 2019

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் செயற்பாடு படுதோல்வி கண்டு விட்டது.எனினும் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் சரியானவை என்ற மனநிலையிலேயே இருக்கப் போகின்றனர்.

எதையும் அலசி ஆராய்ந்து எது சரி,எது பிழை என்ற முடிவுக்கு வராமல் எங்கள் நம்பிக் கைக்குரியவர்கள் செய்வதெல்லாம் நியாய மானவை, முழுக்க முழுக்கச் சரியானவை என்று நம்பிவிடுகின்ற ஒரு பண்பாடு நம் இனத்தில் உண்டு.

இந்தப் பண்பாடு பற்றி நம் அரசியல் தலைவர்களும் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.இதன் காரணமாக மக்களை எப்படியும் வாலாகப் பயன்படுத்தமுடியும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

இதன்காரணமாக மக்கள் எங்களை ஒதுக்கி விடுவார்கள் அல்லது எங்களிடம் கேள்வி கேட்பார்கள் என்ற அச்சம் தமிழ் அரசியல் தலைமையிடம் இம்மியும் இல்லை.

இதனால் அவர்கள் தாம் நினைத்தபாட்டில் நடந்து கொள்கிறார்கள்.

எதுவும் செய்யலாம்.எப்படியும் நடக்கலாம் என்ற அடிப்படையில் அவர்களின் அரசியல் சீவியம் நடந்தாகிறது.

தமிழ் மக்கள் தமது அரசியல் களநிலை தொடர்பில் கவனம் செலுத்தாதவரை தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லை என்பது தான் நிறுதிட்டமான உண்மை.

இது பற்றிப் பலரும் பல தடவைகள் கூறி விட்டனர். இருந்தும் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இப்போதுகூட ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவதில் ஜனாதிபதி வேட்பாளர்கள் கடும் பிரயத்தனம் செய்வர்.

இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருடன் சில அரசியல் கட்சிகள் பேச்சு வார்த்தையும் நடத்தியுள்ளன. இதில் பேசப்பட் டவை என்ன என்பது இதுவரைக்கும் தெரியவில்லை.

தவிர இனியும் பேச்சுக்கள் நடக்கவுள்ளன.அதிலும் குறிப்பாக கோத்தபாய சஜித் பிரேமதாஸ, அனுரகுமாரதிஸா நாயக்க ஆகியோர் தமிழ்த் தரப்புகளுடன் பேச்சு நடத்துவர்.

இதன்போது தாம் ஜனாதிபதியாக வந்தால், தமிழ் மக்களுக்கு வழங்கக்கூடிய தீர்வு என்ன என்பது பற்றிப் பிரஸ்தாபிப்பர்.

இவையயல்லாம் தமிழ் மக்களுக்கு உட னுக்குடன் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

அதேநேரம் தமிழ் அரசியல் தரப்புகளிடம் கூறிய அதேவிடயத்தை குறித்த வேட்பாளர் அல்லது அவரது கட்சி சிங்கள மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். இதுவே வெளிப்படைத்தன்மையாகும்.

இதைவிடுத்து இந்த மக்களுக்கு என்ன தெரியப் போகிறது. இவர்களுக்குச் சொல்வதால் எதுவும் ஆகமாட்டாது என்று எழுந்த மானமாக ஜனாதிபதி வேட்பாளர் எவருடனும் உடன்பாடு காணப்பட்டால், அது மிகப்பெரிய ஏமாற்றத்தையே தரும்.

எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் தரப்பு என்ற குறுகிய கட்ட மைப்புக்குள் தீர்மானங்கள் முடங்கிப் போகா மல் பொதுவெளியில் பொதுமையான கட்ட மைப்பு இது விடயத்தில் உள்ளடங்க வேண்டும்.

நன்றி-வலம்புரி