மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு!

புதன் சனவரி 27, 2021

சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் பார்வைக்காக இன்று காலை 11 மணியளவில் திறந்துவைக்கிறார்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் திகதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து, இதற்கான நிதியை ஒதுக்கியது.

இதனைத் தொடர்ந்து, கட்டுமானப்பணியை 2018ஆம் ஆண்டு மே 8ஆம் திகதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர்.

இந்நிலையில் தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்துள்ளது. 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், 57.8 கோடி ரூபாய் மதிப்பில் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனைச் சார்ந்த கட்டமைப்புகள் அமைக்கப் பட்டுள்ளன.

இந்த நினைவிடத்தில் 15 மீட்டர் உயரமும், 30.5 மீட்டர் நீளமும், 43 மீட்டர் அகலமும் கொண்ட மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை போன்ற அமைப்பு வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் அறிவுத்திறன் பூங்கா, நடைபாதை, 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தரைப்பகுதி, புல்வெளி மற்றும் நீர்த்தடாகங்கள், சுற்றுச்சுவர், அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் முதல்வரின் நினைவிடத்தை திறக்கப்படவுள்ளதால், இன்று ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.