மறைந்தவர்களை நினைவுகூரும் புனித இரவு தொழுகை நாள்

வியாழன் ஏப்ரல் 09, 2020

 இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும் முக்கிய நிகழ்வுகளில் பரா-அத் தொழுகை நாளும் ஒன்று. மறைந்தவர்களுக்காக இரவு முழுவதும் தொழுது மறுநாள் நோன்பிருப்பார்கள். அந்தத் தொழுகையை வீட்டிலேயே இருந்து செய்யுமாறு இஸ்லாமிய அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

இந்து, முஸ்லிம், கிறித்தவர்கள் அனைவரும் மதத்தால் வேறுபட்டாலும் மனதால் ஒன்றுபட்டவர்கள் என்பதற்குச் சான்று இறந்தவர்வளை நினைவுகூரும் நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். மசானக் கொள்ளை, கல்லறைத் திருவிழா, பராஅத் இரவு என அவரவர் மதத்தின் பேரால் தனித்தனியாக அழைக்கப்பட்டாலும், சடங்குகள் முறைகள் வேறுபட்டாலும் பிரார்த்தனை ஒன்றுதான்.

இறந்தவர்களை நினைவுகூர்வது, அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வது, உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்வது ஆகும். இஸ்லாமியர்கள் இதுபோன்ற நினைவுகூர்தலை பரா அத் இரவாகக் கடைப்பிடிக்கின்றனர். அன்றும் அதற்கு அடுத்த நாளும் நோன்பிருப்பார்கள். பரா அத் இரவு அன்று இரவ முழுவதும் தொழுகை நடத்துவார்கள்.

இஸ்லாமியர்களின் வழக்கமான தொழுகையில் ஈடுபடும் இஸ்லாம் மக்களை விட, பரா அத் இரவில் அதிகமானோர் பள்ளி வாசல்களில் கூடி தொழுகை நடத்துவார்கள். பெண்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கூடி கூட்டுத்தொழுகை நடத்துவார்கள். இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக சமுதாய விலக்கல் காரணமாக மத வழிப்பாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் கூட்டுத்தொழுகை சமுதாய விலக்கலுக்கு எதிரானது என்பதால் இஸ்லாமியர்கள் யாரும் வெளியில் வந்து பள்ளி வாசல்களில் தொழ வேண்டாம், கூட்டுத்தொழுகை வேண்டாம் என இஸ்லாமிய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

வஃக்ப் வாரியம் பள்ளி வாசல்கள், அடக்கஸ்தலங்கள், தர்காக்களைத் திறக்க வேண்டாம், பொதுமக்கள் அவ்விடங்களில் கூட வேண்டாம் எனக் கோரிக்கை வைத்துள்ளது. அதேபோன்று தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையும் இஸ்லாமிய மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து உலமாக்கள் சபை அறிக்கை:

''இன்று இரவு புனித பரா- அத் இரவாகும். தற்போது நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள சூழலில் முஸ்லிம் பெருமக்கள் பரா- அத் இரவுக்கான அனைத்து அமல்களையும் தங்கள் வீடுகளிலேயே அமைத்துக் கொள்ளுமாறும், மறுநாள் வெள்ளிக்கிழமை நோன்பில் ஈடுபாடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

பரா-அத் இரவில் சூரா யாசீன் ஓதிய பின்பும், மறுநாள் நோன்பு திறக்கும் நேரத்திலும் தாங்கள் செய்யும் துவாவில் உலக மக்கள் அனைவருக்கும் கரோனா நோய்த் தொற்றிலிருந்து முழுமையாகவும் விரைவாகவும் பாதுகாப்பு பெற அல்லாஹ்விடம் அழுது பிரார்த்திக்கவும்.

நாடு முழுவதும் முடக்கப்பட்டிருப்பதால் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்போர் ஜகாத் பணத்தை (ஏழைகளுக்கு இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் உதவும் செயல்) ஏழை எளிய மக்களுக்கு பயன்படுத்துமாறும், ஜகாத் தவிர இதர பணம், மற்றும் பொருட்களிலிருந்து சகோதர சமய மக்களுக்கு உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்''.

இவ்வாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.